Showing posts with label முயற்சி. Show all posts
Showing posts with label முயற்சி. Show all posts

ஜெயிக்க 25 டிப்ஸ்

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்
.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் மற்றவர்கள் மேல் தினிக்காதீர்கள்.

வெற்றிக்கு சில வழி முறைகள் !

ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
*'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
*உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
*புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
*தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
*கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
*கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
*உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.






*மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
*ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
*வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
*ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
*வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
*'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!

நீங்கள் தெரிந்து கொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.....

வெற்றியின் ரகசியம்!



''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே கண்டேன். 

வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். 

அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. 

ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

அறிவார்ந்த முயற்சி


முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.


யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”
வியாபாரி கேட்டான். “எப்படி?”
“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”


இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?”
“வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது ந்ன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”
வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.


மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”
வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான். “எப்படி?”
“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார்.
நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”


அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.


மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். விதி சில சமயங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள்வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நிலைக்குத் தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரியின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம்.

ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படா விட்டால் வேறெதற்காவது பயன்படுமா என்று யோசித்ததன் பலனாக இரண்டு சீப்புகள் அவனால் விற்க முடிந்தது. புத்த பிக்குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு சீப்பு பயன்படுமா என்று இன்னொரு மகன் யோசித்ததால் அந்த புத்த மடாலயத்தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத்து சீப்புகள் விற்க முடிந்தது.

ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சியாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப்பு விற்க வழியில்லை. அவர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்குகளுக்குப் பயனில்லா விட்டாலும் அவர்களுடன் சம்பந்தப்படும் மற்றவர்களுக்குப் பயன்படுமல்லவா என்கிற சிந்தனையைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதேசங்களைச் செதுக்கி அதை அவர்கள் விரும்பும் வண்ணம் உயர்த்தி அதை நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு புத்தரின் ஆசியாக மாற்றி விற்பனை செய்தான். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக் கொண்ட உழைப்பு எல்லாம் மற்றவர்களை மிஞ்சும் வண்ணம் வெற்றி பெற்றது. மேலும் மற்ற இருவரைப் போல் இவனுடைய விற்பனை ஒரு முறையோடு முடிகிற விற்பனை அல்ல. புத்த மடாலயத்திற்கு நன்கொடைகள் தருகிறவர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும்.


ஒரு சூழ்நிலையை ஒரே நேர்கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று விரிவுபடுத்தி வேறு கோணங்களிலும் சிந்தித்து செயல்படுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல விளைவுகளை அதிகரிக்கும். மேலும் பல கோணங்களிலும் சிந்தித்து, தன் திறமையையும் உழைப்பையும் சேர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பலமடங்கு அதிகரிக்கும். ஆரம்பத்தில் வழியே இல்லை என்று தோன்றியது போய் புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய்ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் மனம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள். புதிய புதிய கோணங்களில் சிந்தியுங்கள்.
சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும், துடிப்புடனும் முயன்றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போகும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக்கூடும்.

தன்னம்பிக்கை

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.



அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

"முடியும் என்று நம்புங்கள் எதையும் செய்து முடிப்பீர்கள்" 

உதவி

 ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

ஜோசியம்

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார். கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது.

தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார். தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டான். “இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்” என்றார் ஜோசியர். தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான். ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார்.

 “அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்” என்று புன்னகைத்தான் தெனாலிராமன். கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார். நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!

முயற்சி


ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.

‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.





வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!

விடியுமென்று விண்ணை நம்பும்போது, முடியுமென்று உன்னை நம்பு!


ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

தைரியசாலி

ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம்
ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது

செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை
அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!

ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல்
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..?
என்ன அசை போடுகிறாய் ...?

நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக
அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது
பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன்  என்று  உரத்த  தொனியில்  கூற
சிங்கம் ஓட்டம் பிடித்தது

தைரியம் இருந்தால் எந்த தருணத்திலும்  ஒருவன் மீளுவான் கோழைதான் சாவான்

தடை


ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை. தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.


எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது. வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை ! என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது...!


செல்வம் சேர்





















  • ஆசைப்படுங்கள்.
  • தன்னம்பிக்கை (Self confidence).
  • சூழ்நிலைகள் (Environment).
  • குறிக்கோள்கள்-வழிமுறைகள் (Goal- Strategy).
  • எண்ணங்களில் பழக்கங்களில் மாற்றம்.
  • வாழ்க்கையின் சிறு கஷ்டங்களில் கவனம் செலுத்தாதீர்கள்-தீர்வுகளில் மனதை செலுத்துங்கள்.
  • தாழ்வு மனப்பான்மையையும் எதிர்விளைவு எண்ணங்களையும் மாற்றுங்கள்.
  • பயத்தைப் போக்குங்கள்.
  • நேரத்தை கணக்கிட கற்றுக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் செய்கிற தொழிலை,மற்றவர்களைவிட 'மாற்றுமுறையில்' செய்யுங்கள் (You need not do different things;but,do'differently than others).
  • நிர்வாகத் திறமையுள்ளவர்களை உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களின் மூலதனம் என்ன என்று புரிந்துகொள்ளுங்கள்.
  • உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் (Own your responsibility).
  • தவறு செய்தால் தவறு என்று ஒப்புக் கொள்ளுங்கள் (I made mistake).
  • கவனியுங்கள் (Always Listen).
  • விடாமுயற்சி.
  •