பங்கு மதிப்பு

நிறுவனத்தின் உண்மையான (பங்கு) மதிப்பு

-குப்புசாமி செல்லமுத்து


பொருளாதாரத் துறையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய முதல் பாடம் பணத்தின் உண்மையான மதிப்பை அறிந்து கொள்வது தான். காலம் பொன் போன்றது; அதன் மதிப்பை அறியாமல் கால விரயம் செய்பவர்கள் சமுதாயப் பிணி. பணமும், காலமும் தராசில் நிறுக்கப் பட்டால் இரண்டும் ஒரு நிறை, ஒரு எடை.


பங்குகள் வாங்கும் போது விலையைத் தான் பார்க்கிறோமே தவிர, வாங்குகின்ற தொழிலின் மதிப்பைப் பார்ப்பதேயில்லை. 'அதெல்லாம் எப்படிப் பாக்கறது?' கேள்வி எழலாம். உலகளாவிய நியதி ஒன்று சொல்கிறேன். ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம். முதல் முறை வாசிக்கும் போது புரிவதற்குச் சற்று கடினமாக இருக்கலாம். மேற்கொண்டு படித்துவிட்டு, பதிவின் இறுதியில் இன்னோர் தடவை திருப்பி வாசித்தால் புரிவது உறுதி.


அதற்கு முன் தற்போதைய மதிப்பைப் பற்றிய ஒரு சிறு பார்வை.இன்றைய நூறு ரூபாய் நாளைய நூறு ரூபாயை விடப் பெரிது. சுமார் 5% பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், அடுத்த வருடம் கிடைக்கும் ரூ100, இன்றைய ரூ95 க்குச் சமம். இது தான் வருங்காலப் பணத்தின் தற்போதைய மதிப்பு (present value of future cash). ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ரூ100 சம்பாதிக்கிறோம் எனில், அந்த சம்பாத்தியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு ரூ429.82.




"நூறு ரூவா குடு. 5 வருசத்துல அதத் திருப்பித்தரேன்" என யாராவது கேட்டா, "சாரி. 77 ரூவா முப்பத்தெட்டுக் காசுக்கு மேல குடுக்க முடியாது"ன்னு சொல்லிருங்க.


சரி, தற்போதைய மதிப்பு (PV - Present value) பற்றிப் பார்த்தோம். ஒரு தொழிலில் முதலீடு செய்யும் போது எங்கனம் இதை பயன்படுத்துவது என ஒரு எளிய உதாரணம் கொண்டு ஆராயலாம்.


திரு.காசப்பன் கார் ஒன்றை, ஓட்டுனர் வைத்து வாடகைக்கு விட்டுச் சம்பாதித்து வருகிறார். ரொம்பப் பழைய காராகையால் இன்னும் மூன்று வருடம் தான் ஓடும். அதற்கு மேல் அதைப் பேரிச்சம் பழத்துக்குத் தான் போடவேண்டும். சும்மா ஜோக்குக்காகச் சொன்னாலும், மூன்று வருடத்தில் விற்றால் ஒன்றரை இலட்சம் கிடைக்கும். அதற்கு மேல் வண்டி ஓடாது என வைத்துக் கொள்வோம். சீசனுக்குத் தகுந்த மாதிரி வருடா வருடம் டிரைவர் சம்பளம், போலீஸ் மாமூல், அரசுக்கான வரி இவையெல்லாம் போக கிடைக்கும் இலாபத்தையும் கீழே கொடுத்துள்ளோம். நம் கணக்கில் பணவீக்க வீதம் 5% என்பதாகக் கொள்வோம்.


முதலாம் ஆண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ57,000

இரண்டாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ50,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ45,125


மூன்றாமாண்டு முடிவில்:
கார் வாடகையில் கிடைத்த இலாபம் = ரூ60,000
கார் விற்ற காசு = ரூ1,50,000
மொத்தப் பணம் = ரூ2,10,000
அதன் தற்போதைய மதிப்பு = ரூ1,80.048.80

மூன்று வருடத்திலும் கிடைக்கும் மொத்தப் பணத்தின் நிகர மதிப்பு = 57,000 + 45,125 + 1,80.048.80 = ரூ2,82,173.8


இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், காசப்பனிடம் இருந்து கார் பிசினஸை நீங்கள் வாங்கினால், இரண்டு இலட்சத்து என்பதாயிரத்துக்கு மேல் கொடுப்பது புத்திசாலித்தனமல்ல. அதே ஒரு நிறுவனமாக இருந்து அதில் 1000 பங்குகள் இருந்தால், பங்கு ஒன்றுக்கு 282 ரூபாய் தான் அதிகபட்ச விலை. சந்தையில் 400 ரூபாய்க்கு அவை விற்பனையானால், நீங்கள் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இப்பதிவின் ஆரம்பத்தின் சொன்ன உலக நியதியை மீண்டுமொரு முறை வாசிக்கலாமா? "ஒரு நிறுவனத்தின் பங்கு விலை, அது இன்று முதல் உலகம் (அல்லது அந்த நிறுவனம்) அழியும் வரை ஈட்டித் தரும் லாபத்தின் தற்போதைய மதிப்பின் கூட்டுத் தொகைக்குச் சமம்."


தற்போதைய பணமதிப்புத் தத்துவம் வாழ்வின் எல்லா இடங்களிலும் கையாளப்படலாம். பங்கு முதலீடு, கடன் கொடுத்தல், ஆராய்ச்சியில் அதிகப் படியான பணத்தை விரயமாக்குதல், கடன் வாங்கிப் மேல் படிப்புப் படித்தல், வங்கி வைப்பீட்டுத் திட்டத்தில் பணம் போடுதல் என எல்லாவற்றிலும்.. அட அவ்வளவு ஏங்க, மாமனார் வரதட்சினை இந்த வருசத்துக்குப் பதிலா அடுத்த வருசம் தருவதாச் சொன்னாக் கூட ஏமாந்துராதீங்க.


வளம் பெறுவோம்.


பி.கு:

1. பணவீக்கம் 5% என்பது கணக்கிட எளிதான ஒரு கற்பனை. நிஜ வாழ்வில் இதை விடக் குறைவாகவோ, அதிகமாகவோ அது இருக்கலாம்.

2. காசப்பன் கார் தொழிலில் (3 வருடமும்) கிடைக்கும் வருவாய் எளிதாக முன் கூட்டியே நிர்ணயம் செய்தோம். நடைமுறையில் அது சாத்தியமல்ல. ஒரு தொழில் சிறக்குமா சிறக்காதா, எவ்வளவு வருவாய் ஈட்டித் தரும் என்பதெல்லாம் அறுதியிட்டுக் கூற முடியாத விஷயங்கள். பங்குச் சந்தையில் விற்று, வாங்கும் எவரும் தத்தமது எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே விலையை நிர்ணயிப்பார்கள் (இதுவும் ஒரு கற்பனையா??)

3. சுலபமாக கணக்குப் போட ஏதுவாக, கார் வாடகைக்கு விடும் தொழிலின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் எனக் கொண்டோம். மூன்று வருடத்தில் மண்டையைப் போடும் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதில்லை என்பது ஆறுதல்

4. வரதட்சனை குறித்தான வரிகள் நகைச்சுவைக்காக மட்டுமே


from:http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_27.html

பரம ரகசியம் 3

சேர மன்னனின் ஆணைக்கிணங்க அந்த காலத்தில் வரி செலுத்துவதில் ஒரு வித்தியாசமான நடைமுறை மக்களிடையே செயல் படுத்தப்பட்டது. அதாவது வரியை பணமாக மட்டுமல்லாமல், தாங்கள் ஈட்டும் பொருள்களாகவும் மக்கள் வரியை செலுத்தி வந்தனர். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொழில் செய்யும் விவசாயிகள், குறிப்பிட்ட அளவு பாலை தினமும் அரசுக்கு கொடுப்பதன் மூலம் தங்கள் வரியை செலுத்தி வந்தனர்.

அவ்வாறே சேர நாட்டில் வாழ்ந்து வந்த சிறு விவசாயி சிதம்பரமும் தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தார்.

பாலை அரசு கிடங்கில் சமர்ப்பிக்க அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், மக்கள் சதுக்கத்தில் ஒன்று கூடி, வரிசையில் நின்று பெரிய அளவிலான பானையில் ஊற்றுவது வழக்கம். சிறு அளவிலேயே விவசாயம் செய்தாலும் நம் சிதம்பரம் மிக மூளைகாரர். தன் தொழிலை பெருக்குவது பற்றிய சிந்தனையிலேயே கன பொழுதும் நகரும் அவருக்கு. தன் கண்களையும், காதுகளையும் கூர்மையாக திறந்தே வைத்திருப்பார்.

அதிகாலை நேரம், நீண்ட வரிசை, சர சரவென நகரும் மக்கள், அரைகுறை தூக்கத்தில் காவலாளிகள் - தினம் தினம் ஒரே நிகழ்ச்சி. சற்றும் மாறாத இந்த இந்த முறையில் , பொதியை சுமக்கும் மாடுகள் போல பழக்கப்பட்டிருந்தனர் அக்கால மக்கள். சற்று சலித்தே போயிருந்தார் நம் சிதம்பரம். ஆனாலும் அவர் கூரிய சிந்தனையில் சிறு பொறியொன்று தட்டியது.

"தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் பால் ஊற்றுகின்றனர், அதுவும் ஒரே பானையில்?? விடியலை கண்டிராத காலை நேரம்.. எப்போதுதான் வரிசை முடியுமோ என அவசரகதியில் காத்திருக்கும் மக்கள்" , பக்கத்தில் இருப்பவரை கூட பெரிதாக சட்டை செய்யாத இந்த  சூழல் நம் சிதம்பரம் மனதில் கேள்வி ஒன்றை எழுப்பியது.. " எல்லோரும் ஒரே பானையில் தான் பால் ஊற்றுகின்றனர், சம அளவு குடுவையே அனைவரும் ஊற்றுகின்றனர் என்றாலும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது??? அவ்வளவு பெரிய பானையில் சிறு குடுவை தண்ணீர் என்ன பெரிய வித்தியாசம் காட்டப்போகிறது ???" இப்படி சிந்தித்த சிதம்பரம் ஒருநாள் அதை பரிசோதித்தும் பார்த்துவிட்டார்.

மிகவும் சாதுர்யமாக, மற்றவர் கண்ணில் மண்ணை தூவி ஒரு மாயாவி போல கன நேர பொழுதில் பாலுக்கு பதில் தண்ணீர் நிரம்பிய குடுவையை,மற்றவர் பார்க்கும் போதே பால் என நம்பும் வண்ணம் கடகடவென செயல் படுத்தினார் சிதம்பரம். அவர் நினைத்தது போலவே நடந்தது .. யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சில நாட்கள் தயக்கத்துக்கு பின், இதனையே தன் பழக்கமாக கொண்டார்.



வரியை சுமையாக கருதி செலுத்தி வந்த மக்களுக்கு, சிதம்பரத்தின் திடீர் சுறுசுறுப்பு ஆச்சிரியத்தை அளித்தாலும் அவரின் கண்கட்டி வித்தையை யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் தினமும் சிதம்பரத்தின் முன்னோ அல்லது பின்னோ வரிசையில் நிற்கும் பரமன்  இதனை மோப்பம் பிடித்துவிட்டார். விடுவாரா அவர்.. மறுநாள் முதல் அவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தார்.. அவருக்கும் சந்தோஷம்.. ஊரே பால் ஊற்ற தாம் மட்டும் தண்ணீர் ஊற்றி தப்பிப்பதில் தீராத சந்தோஷம். ஆனாலும் பரமன் சிதம்பரத்திடம் காட்டிக்கொள்ளவில்லை தாமும் அவரைப் போலவே என்று.


சிறுது சிறிதாக மற்றவர்களிடமும் பரவ ஆரம்பித்தது இந்த தண்ணீர் வித்தை. சிதம்பரத்திடம் இருந்து பரமன் , இப்போது தங்கம், ஜெயம், கார்த்திகேயன், அழகர் என்று வித்தை கற்றவர் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றது.வித்தை அறிந்தவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது; யார் பால் ஊற்றுகிறார்கள் யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என அறியாமலேயே தாங்கள் மட்டுமே புத்திசாலி என எண்ணிக்கொண்டு அதிகரித்துக்கொண்டே இருந்தது இவர்களின் எண்ணிக்கை.

ஒரு சுபதினம்!!! மன்னர் வருகை தந்திருந்தார் அன்று ..!!! ஊர் மக்கள் அனைவரும் பால் ஊற்றி முடித்தப்பின்னர், மன்னர் முன்னிலையில் பானையை திறந்தனர் காவலாளிகள்!!! அதிர்ந்தே போனார் மன்னர் !!! பின்னர் சும்மாவா ??? பானையில் இருந்தது தெள்ள தெளிந்த தண்ணீர் மட்டுமே ..

தாங்கள் மட்டுமே தண்ணீர் ஊற்றுகிறோம் என எண்ணியே அனைவரும் மாட்டிகொண்டனர் அன்று. கடுமையான தண்டனை அளித்து சொத்துக்களையும் பிடுங்கிகொன்டார் மன்னர்.

நம் கடந்த இரண்டு பதிவுகளின் விவாத பொருளே இந்த கதையின் மையம்.. வித்தை ஏன் பரம ரகசியமாக வைக்கப்பட வேண்டும்???? ஊரே பால் ஊற்றும் போது தண்ணீர் ஊற்றி தப்பிப்பது வித்தையே என்றாலும் .. எல்லோராலும் செய்ய முயலும்போது வினையே மிஞ்சும்.

SHARE MARKET லும் FUNDAMENTAL ANALYSIS பார்த்து COMPANY P / L , EPS , PE RATIO மற்றும் பல விஷயங்களை அங்குலம் அங்குலமாக தமது 5 அல்லது 6 வருட படிப்பின் அடிப்படையில் ஒரு CA அல்லது FUND MANAGER எடுக்கும் LONG TERM INVESTMENT டே பங்குசந்தையின் அடிப்படை ஆதாரமாகும்.
20 % MARGIN பணம் மட்டும் செலுத்தி FUTURE TRADE மூலம் குறிப்பாக INTRA DAY யில் லாபம் சம்பாதிக்கும் கலை,  எல்லோரும் பால் ஊற்றும்போது நாம் மட்டும்  தண்ணீர் ஊற்றும் சாதுர்யத்தை உள்ளடிக்கியது. 

INTRADAY என்பது லாபம் ஈட்டுவதற்கான சிறந்த தளம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இங்கு நாம் எப்படிப்பட்ட தெளிவுடன் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியம்.

INTRADAY இல் எவ்வாறான அணுகுமுறையை கையாளுவது என்பதை அடுத்த இறுதி பதிவில் காண்போம்.


பரம ரகசியம் 2

TRADING STRATEGY யை ரகசியமாக வைப்பதென்பது ஒரு சுயநல காரியம் அல்ல. பங்குசந்தையில் INTRA DAY TRADE என்பது கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனை போன்றது.. ஒரே வித்தையை அனைவரும் பயன்படுத்துவதென்பது பெரிய பலன்கள் எதுவும் கிடைத்திறாது.


மேலும் பங்குச்சந்தை BUYER மற்றும் SELLER இடையேயான ஒரு கயிறு இழுக்கும் போட்டியைப் போன்றது. யார் ஜெயிப்பார் என முன்கூட்டியே அறிந்து அனைவரும் ஒரே முனையில் இழுக்க முற் படுவமேயானால்.. போட்டியே கேள்விக்குறியாகிவிடும். ஆதலால் எந்த பங்கு ஜெயிக்கும் என தேடுவதை விட என்ன செய்தால் ஜெயிப்போம் என்ற விழிப்புணர்வே INTRA DAY இல் முக்கியம்.



நாம் செய்ய வேண்டியது இதுதான் .. பங்குசந்தை மிகப்பெரிய கடலைப் போன்றது. . அப்படியே அள்ள ஆசைப்படாமல், நம் தேவைகளை முன்கூட்டியே  வரையறுத்துக்கொண்டு நமது எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க முயல வேண்டும். இல்லையென்றால் எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் போல உதவிக்கு ஆள் இல்லாமல் திண்டாட வேண்டியதுதான்.. !! 

மீண்டும் சிந்திப்போம்..!!!

பரம ரகசியம் 1

தமிழக அரசின் 5 ஆண்டு கால சாதனையாக "பரம ஏழைகள்" என்ற புது பிரிவு உருவாக்கப்பட்டுள்ள இந்த மகத்தான தருணத்தில், பங்குசந்தையில் நீங்கள் பயன்படுத்தும் TRADING STRATEGY யை பரம ரகசியமாக வைத்திருப்பதின் அவசியத்தை கொஞ்சம் பார்ப்போம்.!!

பங்குசந்தையில் ஈடுபடும் பலரும் தங்கள் தொடக்க காலங்களில், PIVOT , TREND போன்ற அடிப்படை முறைகளை கையாளுவதை பார்த்திருப்போம்; அவர்களே நாளடைவில் மற்றொரு முறைக்கு (MACD , STOCASTIC ) மாறுவதையும் சிறிது காலம் சென்றவுடன் எந்தவொரு முறையிலும் நம்பிக்கை அற்றவராய் மாறுவதையும் நடை முறையில் காணலாம்.


உண்மையிலேயே இந்த முறைகள் லாபத்தை ஈட்டி தருமா? ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா??
"கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி?" - இந்த புத்தகத்தை படிக்கின்ற அனைவரும் ஒரே மாதிரியான சுவையில் கத்தரிக்காய் கூட்டு செய்ய முடியுமா? 
ஒரே அளவிலான மசாலாக்கள் கொண்டு ஒரே காட்டில் விளைந்த கத்தரிக்காய்களை வைத்தும் கூட ஒரே சுவையில் வெவ்வேறு நபர்களால் சமைக்க முடியாது.
எப்படி சமையல் கைப்பக்குவம் மாறுமோ அதே போலதான் பங்கு சந்தையில் TRADING பக்குவுமும் மாறும் .

சிறுது PROFESSIONAL வழியில் சொல்வமேயானால், ஒரே வகுப்பில் படித்த எல்லா DOCTOR களும் கைராசி DOCTOR ஆவதில்லை.
படிப்பதை போக, சீரான பயிற்சியே ஏட்டு சுரைக்காயை  கூட்டுக்கு தயார் படுத்தும்.


மீண்டும் சிந்திப்போம் !!

மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!!

மதிப்போ மதிப்பு; பங்கு மதிப்பு!!

குப்புசாமி செல்லமுத்து

பங்கு வர்த்தகம் செய்யும் போது அதன் உண்மையான மதிப்பு (value) என்ன என்பதே தெரியாமல் இருப்பது முட்டாள் தனம். இருந்தாலும் நிறையப் பேர் மதிப்பீடு என்னும் கோட்பாட்டையே மறந்து '10 மணிக்கு வாங்கி, 12 மணிக்கு விற்பதை' வழக்கமாகக் கொண்டுள்ளனர். 'ஆன் லைன்' டிரேடிங் என்ற கொடிய கொசுவின் வாயிலாகப் பலரையும் பாதித்திருக்கிறது இந்த நோய்.

ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு (முதலிடுவதற்கு) முன், அதிலிருந்து எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது பெட்டிக் கடையாக இருந்தாலும் சரி; பெட்ரோல் சுத்திகரிக்கும் ஆலையாக இருந்தாலும் சரி.

A என்றொரு கம்பெனி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் மொத்தம் 1000 பங்குகள் இருக்கின்றன. அந்தக் கம்பெனியின் ஆண்டு லாபம் (செலவு, கடனுக்கான வட்டி மற்றும் அரசாங்கத்திற்குச் செலுத்தும் வரி போக மீதம் கிடைக்கும் தொகை) ரூ10,000. ஆயிரம் பங்குளின் லாபம் பத்தாயிரம் என்றால், ஒரு பங்கு ஈட்டித் தந்த லாபம் எவ்வளவு? பத்து ரூபாய். அதைத் தான் EPS - Earnings per Share- என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

"நல்ல லாபமா இருக்கே. ஒரு பங்குக்குப் பத்து ரூபாயா!!" என யாரும் வியக்க வேண்டாம். நல்ல லாபமா இல்லையா என்பதை, அதற்கு என்ன விலை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே சொல்ல முடியும். மேலே குறிப்பிட்ட நிறுவனம் A இன் பங்கு ஒன்று ரூ.850 க்கு வியாபாரமாகி வருகிறது என்றால் அதை நீங்கள் வாங்குவீர்களா? அதாவது ஒரு ஆண்டு கழித்து 10 ரூபாய் கிடைக்க ரூ850 தரச் சம்மதிப்பீர்களா? அப்படியே செய்தாலும் அது 1.18% வருமானத்தைத் தான் ஈட்டித்தரும்.

(10 / 850) X 100 = 1.18%

இதே நிறுவனத்தின் பங்கு ரூ.120 க்கு வியாபாரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போதாவது வாங்குவீர்களா? அப்படி நீங்கள் செய்தால் நீங்கள் இட்டு வைக்கும் 120 ரூபாய் முதலீடு 10 ரூபாயைச் சம்பாதிக்கும்; அதாவது 8.33%. வங்கியில் கிடைக்கும் வட்டியை விட இது அதிகமாக இருந்தால் இந்த விலையில் வாங்குவதைச் சாதகமாகவே கருதலாம்.

இந்த மாதிரியான கணக்குகளைச் சுலபமாக்க நமக்குக் கிடைத்த உபகரணம் தான் PE விகிதம். Price Earning ratio என்பதே அது. Price (விலை) க்கும் Earning (லாபம்) க்கும் உள்ள விகிதமே PE.

PE = Price / Earning அதாவது விலை/லாபம்

ஒரு ஒற்றைப் பங்கின் விலையை, அது ஈட்டித்தரும் லாபத்தால் (EPS) வகுக்கவேண்டும்.

நமது உதாரணத்தின் படி PE = 120/10 = 12

இதை எப்படியெல்லாம் சொல்கிறார்கள் பாருங்கள்.

  • கம்பெனி A இன் பங்கு PE விகிதம் 12 இல் வியாபாரமாகிறது.
  • கம்பெனி A இன் விலை அதன் லாபத்தின் 12 மடங்காக உள்ளது.

இப்படியெல்லாம் எங்காவது கேட்கவோ, படிக்கவோ நேர்ந்தால் இனி மேல் குழப்பமடையத் தேவையில்லை.

சரி.. PE விகிதத்தை எங்கனம் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது? இதுகாறும் நாம் கொண்ட அலசலின் படி, குறைவான PE விகிதம் என்றால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும், அதிகமான PE விகிதம் என்றால் நமக்குக் குறைந்த லாபம் கிடைக்கும் சாத்தியக் கூறு அதிகமாகவும் இருப்பதை அறிகிறோம். பங்கு முதலீட்டாளர் ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் இது தலையாயது.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை அதன் PE விகிதத்தின் அடிப்படையில் மட்டுமே எவரும் வாங்குவது இல்லை. நிர்வாகத் திறமை, தொலிழின் வளர்ச்சி வாய்ப்பு, அதன் வசமிருக்கும் அசையும் & அசையாத சொத்துக்களின் மதிப்பு, ஈவுத்தொகை வரலாறு (dividend history) போன்ற பற்பல காரணிகள் கருத்தில் கொள்ளாப்பட்டே முதலீட்டு முடிவுகள் எடுக்கப் படுகின்றன.
என்ன தான் மற்ற அளவுகோள்கள் மூலம் முடிவு எடுப்பது நடைமுறையில் இருந்தாலும், PE விகிதத்தின் அடிப்படையிலான பங்கு மதிப்பீடு பற்றித் தெரியாமல் முதலீடு செய்வதென்பது, மாலைக் கண் வியாதி படைத்த கவுண்டமணி 'சின்னத்தம்பி' படத்தில் இரவில் T.V.S. 50 ஓட்டிச் செல்வதற்குச் சமம்.

வளம் வெறுவோம்.

from:http://panguvanigam.blogspot.com/2006/05/blog-post_11.html