
செல்வம் சேர்

கிரீஸ் :குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி


சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார். "கடந்த முறை முடிவு செய்தது குறித்து, இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது' என, காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.
"யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ போட்டுள்ள புது குண்டு, "யூரோ' மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
என்ன நடந்தது? : தனது கடன் நெருக்கடி தீர, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகியவற்றில், கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.
ஆயினும், அதன் கடன் குறையவில்லை என்பதால், கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள், தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும். மூன்றாவது தவணையாக, 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என, மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.
பொது ஓட்டெடுப்பு: நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர், அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். அவரது இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
அமைச்சரவை ஆதரவு: இந்நிலையில், நேற்று, ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
எம்.பி.,க்கள் எதிர்ப்பு: எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.,க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில், நாளை, ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.
ஜெர்மனி எச்சரிக்கை: கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிரீஸ் பிடிவாதம்: ஆனால், அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு, "யூரோ' மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால், "யூரோ' கரன்சியில் கிரீஸ் தொடரும்' என்றார்.
குழப்பத்தில் பிரான்ஸ், ஜெர்மனி: ஜி 20 கூட்டத்தில், கிரீஸ் மற்றும் "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும், இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
பணக்காரர்கள்

பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான்.
இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பணக்கார அம்மா சாவித்ரி ஜின்டால்
பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச தாய்மார்கள் தினத்தையொட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்.
ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலர் (ரூ. 55,000 கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.
ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952ல் உருவாக்கினார். 2005ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார்.
ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.
பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம் பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர்.
இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரவ்லிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.
பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பங்களின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.
வால்மார்ட் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250 கோடி டாலராகும்.
உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட் ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் சாவித்ரி.
இவரது மகன்களில் ஒருவரான நவீன் ஜின்டால், ஹரியாணாவின் குருஷேத்ரா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.
எண்ணெய் நிறுவனங்களின் 3 மாத நஷ்டம் ரூ.21,374!!
டெல்லி: 2011-12ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.21,374 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவிட்டதால் அதனால் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. ஆனால், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.64,900 கோடியாகும்.
ஒரு லிட்டர் டீசல் விற்கையில் ரூ.7.06ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை விற்கும்போது ரூ.25.90ம், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவை விற்கையில் ரூ.270.50ம் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
அதாவது ஒரு நாளைக்கு இந்த 3 நிறுவனங்களுக்கும் ரூ.272 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்.-வேகமாகப் பரவுகிறது!
அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.
இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :
1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.
4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.
5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.
7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.
8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.
10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.
11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பரவி வரும் போராட்டம்
நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.
அதிபர் ஒபாமா கருத்து
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
பரவி வரும் போராட்டம்
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.
தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.
அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.
நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.
