'சிலிக்கான் கிங்'-பதவி விலகல்




ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

ATM – ஏ டிஎம் தெரிந்ததும் தெரியாததும்!


ATM (Automatic Teller Machine)
ஏ.டி.எம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிய தகவல்கள் எல்லாம் மிகவும் சுவாரஸ்யமானது.
கட்டுக்கட்டாக பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு இப்போதெல்லாம் பஸ்சில் பதட்டப்பட்டுக்கொண்டே யாரும் பயணிப்பதில்லை. காரணம் ஏடி. எம் அட்டைகள்.
வங்கியில் கணக்கை ஆரம்பித்த அனைவருக்குமே ஒரு அட்டை கிடைக்க தற்போது எல்லா வங்கிகளும் வசதி செய்துள்ளன. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் எனும் நிலையும், எல்லா தெருக்களுக்குள்ளும் நுழைந்துவிட்ட தானியங்கி இயந்திரங்களும் பணத்தை தூக்கிச் சுமக்கும் பணியை குறைத்திருக்கின்றன.
நாம் பணம் தேவைப்படும் போது ஏ.டி. எம் முன்னால் சென்று நிற்கிறோம், நமது அட்டையை உள்ளே நுழைக்கிறோம். சங்கேத எண்ணை அமுக்குகிறோம். நம்முடைய கட்டளைக்கு ஏற்ப பணம் கிடைக்கிறது. திருப்திப்பட்டு விடுகிறோம்.
Automatic Teller Machine என்பதன் சுருக்கம் தான் ATM. நம்முடைய அட்டையில் 16 எண்கள் கொண்ட ஒரு எண் இருக்கும். இது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு சாதாரண எண். ஆனால் இதன் ஒவ்வொரு எண்ணிற்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.
முதல் ஆறு எண்கள் அட்டை எந்த வங்கியிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். அதற்கடுத்த ஒன்பது எண்களும் சேவை வழங்கு நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்த எல்லைக்குள் இருக்கும். கடைசி எண் ஒரு ரகசிய எண். அதுதான் உங்கள் அட்டை பயன்படுத்தக் கூடியதா இல்லையா என்பதைச் சொல்லும்.
மாஸ்டர்கார்ட் எண்கள் ஐந்து எனும் எண்ணில் ஆரம்பிக்கும், விசா எண்கள் நான்கு எனும் எண்ணில் ஆரம்பிக்கும் என்பது ஒரு சிறு சுவாரஸ்யத் தகவல்.
அட்டைகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிரடிட் கார்ட் எனப்படும் கடனட்டைகள். இன்னொன்று டெபிட் கார்ட் அல்லது செக் கார்ட். கடனட்டையில் நாம் செலவழிக்கும் பணத்தை மாதம் ஒருமுறை செலுத்தினால் போதும். செக் கார்ட் மூலம் செலவழிக்கும் பணம் நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து உடனே கழிக்கப்பட்டு விடும்.
ஏடிஎம் முன்னால் சென்று அட்டையை உள்ளே செலுத்தி நம்முடைய சங்கேத எண்ணைக் குறிப்பிட்டபின் நமக்கு எவ்வளவு பணம் தேவை என்பதைக் குறிப்பிட்டு பொத்தானை அமுக்குகிறோம். நம்முடைய அட்டையின் பின்னால் இருக்கும் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் நம்முடைய அட்டையின் எண்ணை மென் குறியீடாக்கி உள்ளே அனுப்பும். அதற்குப் பயன்படும் இடம் தான் கார்ட் ரீடர் எனப்படும் நாம் அட்டையை உள்ளே நுழைக்கும் இடம். அப்போது கட்டளை ஏடிஎம் முனையிலிருந்து சுவிட்ச் என அழைக்கப்படும் கணினி மென்பொருளுக்குள் நுழைகிறது. இங்கே இரண்டு விதமான சோதனை வளையங்கள் இருக்கின்றன. முதலில் நாம் பயன்படுத்தும் அட்டை சரியானது தானா ? அதற்கு நாம் கொடுத்த சங்கேத எண் சரியானது தானா என்பதைச் சரிபார்க்கும் சோதனை.
இந்தச் சோதனை தோல்வியடைந்தால் நாம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று பொருள். ஒருவேளை சங்கேத எண்ணைத் தவறாகச் சொல்லியிருக்கலாம்.
இரண்டாவது சோதனை நம்முடைய வங்கிக்கணக்கில் நாம் கேட்கும் பணம் இருக்கிறதா ? நான் பணம் எடுப்பதில் இன்றைய தினத்தின் உச்ச வரம்பை எட்டியிருக்கிறோமா ? என்பது குறித்த சோதனைகள். முதல் சோதனை முடிந்தபின், இரண்டாவது சோதனைக்குள் நுழைந்து இரண்டும் சரியாய் இருந்தால் பணம் கொடுக்கலாம் எனும் பதில் தானியங்கி முனைக்கு வரும். இந்த இரண்டு சோதனைகளையும் கடக்க பல இலட்சம் தகவல்கள் அடங்கியிருக்கும் மென் கோப்புகளில் தேடுதல் நடக்கும்.
இந்த தேடுதல் முடிந்து தானியங்கி முனைக்கு வரும் தாமதம் சில வினாடிகளே. இந்த வினாடிகள் அதிகரிக்கும் போது தான் நாம் சலித்துக் கொள்கிறோம்.
பணத்தை எண்ணித் தரும் பணம் பட்டுவாடா இயந்திரமும் நுட்பமான சென்சார்களால் ஆனது. இது தவறு இழைப்பதில்லை. இரண்டு நோட்டுகள் ஒட்டி வரும் எனும் ஆசை நப்பாசையாய் போய்விடும் என்பது திண்ணம்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் அடங்கியிருக்கிறது. நாம் நம்மிடம் ஒரு வங்கியின் அட்டை இருந்தாலும் வேறு வங்கியின் தானியங்கி நிலையமும் நமக்குக் பணம் கொடுக்கும். எப்படி ?
இதை செட்டில்மண்ட் என்பார்கள். அதாவது வங்கிகள் எந்தெந்த வங்கி அட்டைகளுக்குப் பணம் கொடுக்கிறதோ அந்தந்த வங்கிகளின் கணக்கில் அந்தப் பணத்தைச் சேர்த்துக் கொள்ளும். அன்றைய தினத்தின் இறுதியில் வங்கிகள் மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு உடன்பாடு செய்து கொள்கின்றன.
மின் பண பரிமாற்றம் எனப்படும் இந்த தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானதும், பணம் ஈட்டக் கூடியதுமாகும். பல முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் இதை நடத்துகின்றன.
சரி, மென்பொருள் நிறுவனங்களுக்கு இதனால் எப்படி காசு கிடைக்கிறது ? இந்த தானியங்கி நிலையத்திலிருந்து செல்லும் கட்டளைகள் மென்பொருளோடு இணையாவிடில் ஒன்றுக்கும் உதவாது. இதன் பின்னால் இருக்கும் மென்பொருள் தான் வரும் தகவல்களைச் சரிபார்த்தல், பணம் பட்டுவாடா செய்ய உத்தரவிடுதல், மீதம் கணக்கிடுதல் என ஒட்டுமொத்தப் பணியையும் செய்கிறது. அனைத்து விவரங்களையும் மென் கோப்புகளில் சேமித்தும் வைக்கிறது. இந்த சுவிட்ச் எனப்படும் இந்த மென்பொருளுக்குள் வரும் தகவல்கள், அல்லது விண்ணப்பங்களுக்கு ஏற்ப மென்பொருள் நிறுவனம் வங்கிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன.
அதாவது நீங்கள் பத்து முறை பணம் எடுக்கிறீர்கள் என்றால் மென்பொருளுக்குக் கிடைப்பது பத்து தகவல்கள். ஒவ்வொரு தகவலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மென்பொருள் நிறுவனத்துக்குச் செல்லும். தினமும் பல ஆயிரக்கணக்கான தானியங்கிகளில் நிகழும் இந்த பரிவர்த்தனை மூலம் பல கோடிக்கணக்கான பணம் மென்பொருள் நிறுவனங்களுக்குப் போய் சேர்கிறது. இதற்காகத் தான் ஆயிரக்கணக்கான மென்பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். அதிலும் ஒவ்வொரு வங்கிக்கும் உரிய பிரத்தேக சட்டங்களின் அடிப்படையில் மென்பொருள் இயங்குவது தான் முக்கியம். குறிப்பாக சில வங்கிகள் ஒரு நாள் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே
ஏடிஎம் வழியாக எடுக்க அனுமதிக்கும். சில வங்கிகள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அனுமதிக்கும். இதற்குத் தக்க படி மென்பொருள் தயாராக்கப் பட வேண்டும்.
அமெரிக்காவில் இருபத்து ஐந்திற்கும் முப்பத்து நான்கிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் அறுபது சதவீதம் பேர் மாதம் எட்டு முறை ஏடிம் இயந்திரத்தைப் பணம் எடுக்க நாடுகிறார்களாம். பெரும்பாலான ஏடிஎம் நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் தான் அதிக பரிவர்த்தனை நடக்கிறதாம்.
ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் மற்றவர்களை விட இருபது முதல் இருபத்து ஐந்து சதவீதம் வரை அதிகமாகச் செலவழிக்கிறார்களாம்.
ஏடிஎம் அட்டைக்கு மிக முக்கியமானது பின் எனப்படும் சங்கேத எண். இது தானியங்கியில் அளிக்கப்பட்டவுடன் குறியீடுகளாக மாறிவிடும். அதன் பின் யாரும் அதை திருட முடியாது.
ஆனால் அது நம்மிடம் இருக்கும் வரை அதை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்கு தான். அட்டையும் எண்ணும் கிடைத்துவிட்டால் யார் வேண்டுமானால் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியும். இணையத்திலும் பொருட்கள் வாங்க முடியும்.
சங்கேத எண்ணை பத்திரமாய் வைத்திருக்க சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் போதும்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
மறந்து விடுவோம் எழுதியே ஆகவேண்டும் என விரும்பினால் அதை வீட்டில் எங்காவது பத்திரமாய் எழுதி வைக்க வேண்டும்.
பர்சிலோ, ஏடிஎம் அட்டை இருக்கும் இடங்களிலோ வைக்கவே கூடாது.
சங்கேத எண் உங்களோடு தொடர்பற்றவையாக ஆனால் உங்களால் மறக்க முடியாததாக இருக்க வேண்டும்.
குறிப்பாக உங்கள் பிறந்த நாள், தொலைபேசி எண் போன்றவை இல்லாமல் இருத்தல் நலம்.
சங்கேத எண்ணை எழுதி வைக்கும்போது கூட அதை உங்களுக்கு மட்டுமே புரியும் சங்கேத மொழியிலேயே எழுதி வைக்கலாம்.
சங்கேத எண்ணை பயன்படுத்தும் போது தானியங்கிக்கு மிகவும் அருகாக குனிந்து மற்றவர்கள் பார்க்காத படி எண்களை பயன்படுத்த வேண்டும். குனிந்தபடி எண்ணை பயன்படுத்துவது ரகசியக் காமராக்களிடமிருந்து பெரும்பாலும் தப்ப வைக்கும்.
பணம் எடுத்ததும் உடனே பாக்கெட்டில் பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்று விடுங்கள். வீட்டில் சென்று எண்ணிப்பாருங்கள். எப்படியானாலும் தவறு நிகழ்ந்தால் அதை சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தான் தெரியப்படுத்த வேண்டும் எனவே தானியங்கி முன்னால் நின்று எண்ணிக்கொண்டிருப்பது தேவையற்றது.
யாராவது உங்களைத் தாக்கக் கூடும் எனும் பயம் தோன்றினால் ”கேன்சல்” பட்டனை அமுக்கி விட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்புங்கள்.
இரவு நேரங்களில் ஏடிஎம் பயன்படுத்த வேண்டியிருந்தால் ஆள்நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலுள்ள ஏடிஎம் களைப் பயன்படுத்துங்கள்.
முக்கியமாக அட்டையின் பின்னால் இருக்கும் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அட்டை தொலைந்ததை அறிந்தால் உடனே அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள். உடனே உங்கள் அட்டையின் எண் ”ஏமாற்று” வரிசையில் சேர்க்கப்படும். அதன்பின் அந்த அட்டையை யாராவது பயன்படுத்தினாலும் அது ”ஏமாற்று வேலை” என்னும் முத்திரை இருப்பதால் நிராகரிக்கப்படும்.

அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா


அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது
. 2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன். அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார். கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார். சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில், கடன் பத்திரங்கள் மற்றும் டாலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீனக் கரன்சியான ரென்மின்பியின் மதிப்பை டாலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத் தக்கவை. ஆனாலும், அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும்.சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட, வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும். அதே சமயம், டாலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால், சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம். தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை, சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால், சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது: இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டாலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் டாலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும். தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான கரன்சியாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு கரன்சிகளில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால், அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது. இவ்வாறு யாவோ வெய் தெரிவித்தார். அமெரிக்காவின் கடன் சுமை மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளின் கடன்சுமை, தங்கம் விலை உயர்வு ஆகிய பிரச்னைகளும் சீனாவுக்கு சவால் விடும் அளவில் உள்ளன. ஏனெனில், உலக நாடுகள் முழுவதும் தங்கள் முதலீடுகளின் மதிப்பைக் குறையவிடாமல் தடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கான அறிகுறிதான் தங்கம், வெள்ளி விலை ஏற்றம். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலை ஆகும். மிகவும் வளர்ந்த பொருளாதார நாடாக கருதப்படும் சீனாவுக்கு இந்தச் சிக்கல் எதிர்பாராதது. அதே சமயம், அதிக அபாயங்களைக் கொண்டது.

பங்குச்சந்தை எங்கே செல்கிறது?

பங்குசந்தையை முதலீடு செய்ய பயன் பயன்படுத்தும் முறை price earnings என்னும் (pe ) முறையில் கணக்கிட வேண்டும்

nifty p/e chart -weekly


nifty p/e chart-daily

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை போன்று nifty p/e 13-15 வரும் போது முதலீடு செய்வது பாதுகாப்பானது ஆகும்

தங்கம்

அமெரிக்காவின் கடன் கொள்கை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது

முந்தைய பதிவை காண இங்கே செல்லவும்



அமெரிக்காவின் கடம் கொள்கை பற்றி வேல்தர்மா கட்டுரை

கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.

நாம் வரவிற்கு மிஞ்சி செலவு செய்தால் கடன் படுவோம். பட்ட கடனை அடைக்க செலவை குறைத்து வரவைக் கூட்ட வேண்டும் அல்லது கடன் பட்டு பட்ட கடனை அடைக்க வேண்டும் அல்லது இரண்டையும் செய்ய வேண்டும். பட்ட கடனை அடைக்காவிடில் மேற் கொண்டு கடன் பெறுவது எமக்கு மிகவும் சிரமமாக அமையும். எமக்கு கடன் தருபவர்கள் அதிக வட்டி அறவிடுவார்கள். இப்படியான ஒரு பிரச்சனையில் அமெரிக்கா இப்போது அகப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு தொடர்ந்து வரவிற்கு மிஞ்சி செலவு செய்து வந்தது. 1950இல் இருந்து 1980 வரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த அமெரிக்க அரசின் கடன் சுமை 1980இற்குப் பின்னர் மோசமாக வளர்ந்து கொண்டே போகின்றது. தற்போது அமெரிக்காவின் வரவு 2.2ரில்லியன் டொலர்கள் செலவு 3.5ரில்லியன் டொலர்கள். பாவம் அமெரிக்கா அதற்குக் கடன் கொடுப்பவர்களில் முக்கியமானவர் சீன அரசு. அமெரிக்கா நாளொன்றிற்கு 4பில்லியன் டொலர்களை அதாவது வருடத்திற்கு ஒன்றரை ரில்லியன் டொலர்கள் வட்டியாகச் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளது .

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு(Debt Ceiling)
அமெரிக்க அரசு எவ்வளவு கடன் படலாம் என்பதற்கு என்று ஒரு உச்ச வரம்பு (debt ceiling) உள்ளது. இதை அமெரிக்க பாராளமன்றத்தின் (காங்கிரசு) இரு அவைகளான மக்களவையும் மூதவையும் முடிவு செய்கின்றன. அமெரிக்காவின் இப்போதைய கடன் உச்ச வரம்பு 14.3ரில்லியன் டொலர்கள் ($14,300,000,000,000). அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிப்பதால் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும். அதுவும் ஆகஸ்ட் 2-ம் திகதிக்கு முன்னர் இது அமெரிக்க பாராளமன்ற அவைகளால் ஒரு சட்டமாக அங்கீகரிக்கப் படவேண்டும். இந்த உச்சவரம்பை உயர்த்தி மேலும் கடன் பட்டு கடன் அடைக்க வேண்டும். அல்லாவிடில் அமெரிக்கா தனது கடனுக்கான வட்டிகளைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அமெரிக்கக் கடன் வளரத் தொடங்கியபின் - 1980 இற்குப் பின்- 39தடவை உயர்த்தப் பட்டுள்ளன. ரொனால்ட் ரீகன் நிர்வாகத்தில் மட்டும் 17தடவை உயர்த்தப்பட்டன.


பராக் ஒபாமாவின் இக்கட்டான நிலை.
அமெரிக்க அதிபருக்கு நிர்வாக அதிகாரம் மட்டுமே உண்டு. சட்டவாக்க அதிகாரம் மக்களவையிடமும் மூதவையிடமுமே உண்டு. முதலில் மக்களவையில் சட்ட மூலம் நிறவேற்றப்பட்டு பின்னர் மூதவையில் அங்கீகரிக்கப்பட்டு ஒரு சட்டம் அமூலுக்கு வரும்.தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபமா சனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். மக்களவையில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால்பராக் ஒபாமா இக்கட்டான நிலையில் இருக்கிறார். மூதவையில் பராக் ஒபாமாவின் சனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். 2010இல் நடந்த மக்களவைத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் அரச செலவீனங்களைக் குறைப்போம் என்ற வாக்குறுதியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிறது. இரு கட்சியினரினதும் வெற்றி வாய்ப்புக்கள் இந்த கடன் நெருக்கடியை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதில் தங்கி இருக்கிறது.

எந்த வழி
கடன் சுமை அதிகரித்த அமெரிக்கா செய்ய வேண்டியவை:
1. செலவுகளைக் குறைத்தல். இது வறிய மக்களின் வாழ்வாதரத்தைப் பதிக்கும். அரச நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் குறைக்க வறிய மக்கள் பாதிக்கப்படுவர். மாணவர்கள் பாதிக்கப்படுவர். சுகாதார சேவைகள் பாதிக்கப்படும். பாதுகாப்புச் செல்வீனங்கள் குறையும்.
2. வரிகளை அதிகரித்தல். இது அமெரிக்கப் பணக்காரர்களையும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி குன்றும்
3. மேலும் கடன் படல். அமெரிக்கா மேலும் கடன் பட கடன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும்.
ஒபாமா இந்த மூன்றையும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் எதை எந்த அளவில் செய்வது என்பதில் அமெரிக்காவின் இரு கட்சியினரிடையே முரண்பாடு.
அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் 22-07-2011இலன்று கடன் நெருக்கடி பற்றி கலந்துரையாடினார். ஒபாமா செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரிக்கும் யோசனையை முன் வைத்தபடியால் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சு வார்த்தையை முறித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். வலது சாரியான அவர் வரி அதிகரிப்பை விரும்பவில்லை. ஒபாமா பல சமூக சேவை சுகாதார சேவைச் செலவீனங்களைக் குறைக்க ஒத்துக் கொண்டும் மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் பேச்சை முறித்ததைப் பலர் விரும்பவில்லை.

அமெரிக்கக் கடன் நெருக்கடியின் பின்னணி.
2010இல் ஒபாமாவும் மக்களவையும் அரச செலவீனங்களை மூன்று ரில்லியன் டொலர்களால் குறைக்கவும் வரி வருமானத்தை ஒரு ரில்லியன் டொலர்களால் அதிகரிக்கவும் ஒத்துக் கொண்டனர். 2011 ஜனவரியில் அறுவர் குழு எனப்படும் இரு கட்சிகளையும் சேர்ந்த ஆறு மூதவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமெரிக்காவின் நீண்டகாலக் கடன் சுமையைக் குறைக்க உடன்பட்டது. இக்குழுவிற்கு அமெரிக்க உப அதிபர் பிடென் தலைமை தாங்கியதால் பிடென் குழுஎன்றும் அழைப்பர்.. 2011இல் குடியரசு உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை முந்தைய ஆண்டிலும் பார்க்க 61பில்லியன் டொலர்கள் குறைவான செலவீனங்களைக் கொண்ட பாதிட்டை நிறைவேற்ற அதை ஒரு மாதம் கழித்து சனநாயக கட்சி உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மூதவை நிராகரித்தது. 2011 ஏப்ரலில் அமெரிக்க அரசின் பாதீடு நிறை வேற்றப்படாமல் அரச நிர்வாகம் இழுத்து மூடப்படுமா என்ற நெருக்கடியின் விளிம்பு வரை அமெரிக்கா இட்டுச் செல்லப்பட்டது. இறுதியில் பத்து வருடங்களில் ஆறு ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்புடன் அரச பாதீட்டை மக்களவை நிறைவேற்றியது. 2011 மே மாதம் 9-ம் திகதி அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டால் அதே அளவு செலவீனக் குறைப்புச் செய்யப்பட வேண்டும் என்று சூளுரைத்தார். 11-05-2011 மக்களவை கல்வி, தொழில், சுகாதார சேவை போன்றவற்றிற்கான செலவீனக் கட்டுப்பாகளை முன்வைத்தது. 16-05-2011 அமெரிக்க அரசு தன் கடன் உச்சவரம்பான 14.3 ரில்லியன் டொலர்களை எட்டியது. 17-05-2011 அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் தோன்றின. 31-05-2011 இலன்று அமெரிக்க மக்களவையில் கடன் உச்சவரம்பை உயர்த்தும் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 23-06-2011 சனநாயகக் கட்சியினர் வரி விதிப்பை 400பில்லியன்களால் அதிகரிக்கப் பார்க்கிறார்கள் என்று குறை கூறி மீண்டும் அறுவர் குழுவிற்குள்(பிடென் குழு) முரண்பாடுகள் உருவாகின. ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒபாமாவும் குடியரசுக் கட்சியினரும் தொடர் பேச்சுவார்த்தைகளிலும் இழுபறிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் கேட்கும் செலவீனக் குறைப்பிற்கு சனநாயாகக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை. சனநாயக் கட்சியினர் கேடும் வரி அதிகரிப்புக்களுக்கு குடியரசுக் கட்சியினர் ஒத்துக் கொள்கிறார்கள் இல்லை.

அமெரிக்கத் திறைசேரி
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் உயர்த்தாவிடில் வரலாற்றில் முதல் முறையாக தனது கடன் நிலுவையைச் செலுத்தாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறது. குடியரசுக் கட்சியினர் கட்சி நலன்களுக்காக அமெரிக்கா தனது கடன்களைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். குடியரசுக் கட்சியினர் கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று சிந்திக்க வேண்டும் என்று திறைசேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லாவிடில் உலக நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என்றும் பலர் கருதுகின்றனர்.

தேநீர் விருந்துக் கட்சி
அமெரிக்காவில் 2009இல் இருந்து தேநீர் விருந்து கட்சி என்று ஒரு பழமைவாதக் கும்பல் வரி அதிகரிப்புக்களை எதிர்த்து வருகின்றது. இதுவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வரி அதிகரிப்பை பலமாக எதிர்க்கிறது. இது ஒரு இனவாதக் கும்பல் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

உலகெங்கும் அதிர்வலைகள் பாயும்
அமெரிக்கா தனது கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவின் கடன்படு திறன் குறைக்கப்படும் என்று Standard & Poor அறிவித்துள்ளது அமெரிக்காவின் கடன்படு திறன் குறைப்பு உலக வட்டி வீதத்தை உயர்த்தலாம். அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படாமல் அது தன் கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமல் போனால் அமெரிக்கக் கடன் முறிகளின் வீழ்ச்சியடையலாம். வட்டி வீதங்கள் அதிகரிக்கப்படலாம். பன்னாட்டு நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்கா தும்மினால் பல நாட்டு நிதிச் சந்தைகளிற்கு தடிமன் பிடிக்கும். இபோது அமெரிக்க நிதிச் சந்தைக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க நிதிச் சந்தையில் நிமோனியா என்றால் உலகச் சந்தையில் என்ன நடக்கும் என்பதுதான் பலரின் கவலை.

பிந்திய செய்திகள்:
1. 2011-ஜூலை 25th 5.00 GMT: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் அமெரிக்க கடன் உச்ச வரம்பை உயர்த்துதல் தொடர்பாக ஒரு உடன்பாடு எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை ஒரு டொலர்களால் குறைந்தது. உலக பொருளாதார மந்தம் தொடரலாம் என்ற அச்சம் இதன் காரணம்.
2. 2011-ஜூலை 25th 6.00 GMT: அமெரிக்க நிதி நெருக்கடியை ஒட்டி பங்குகளினதும் கடன் முறிகளினதும் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. தங்கத்தின் விலையும் சுவிஸ் பிராங்கின் நாணயமாற்று வீகிதமும் உயர்ந்துள்ளன. முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை பாதுகாப்பாக தங்கத்திலும் சுவிஸ் வங்கிகளிலும் முதலீடு செய்கிறார்கள்.
3. 2011-ஜூலை 25th 9.40 GMT: Senate Majority Leader Harry Reid அவர்கள் 2.7ரில்லியன் டொலர்கள் செலவீனக் குறைப்பும்(பத்து ஆண்டுகளில்) அதே அளவு கடன் உச்ச வரம்பு உயர்த்தலும் கொண்ட ஒரு சட்ட மூலத்தைத் தயாரித்துள்ளார். இதில் சமூக, சுகாதாரத் துறைகளுக்கான செலவீனங்கள் குறைக்கப்படமாட்டாது.
3. 2011-ஜூலை 25th 10.00 GMT: அமெரிக்க மக்களவைத் தலைவர் ஜோன் போர்னர் கடன் உச்ச வரம்பை உடனடியாக ஒரு ரில்லியன் டொலர்களாலும் பின்னர் அடுத்ததாஅண்டு ஒருரில்லியன் டொலர்களாலும் உயர்த்தும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
4. 2011-ஜூலை 25th 11.30 GMT: ஆசியப்பங்குகள் விலை வீழ்ச்சி. அதில் சீனப் பங்குகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டன.
5. 2011-ஜூலை 25th 15.50 GMT தங்கத்தின் விலை என்றுமில்லாத அளவு உயர்வு. Gold prices vaulted to a record $1,624.30 a troy ounce shortly after electronic trading opened Sunday night as buyers in Asia leapt at the chance to protect their wealth from rising uncertainty.
6. 2011-ஜூலை 26th 09.40 GMT: அமெரிக்க பாடகி அமியின் இறப்பையும் அமெரிக்கக் கடன் நெருக்கடியையும் சம்பந்தப்படுத்தி தனது டுவிட்டரில் எழுதியமைக்காக அமெரிக்க மக்களவை உறுப்பினர் பில்லி லோங் கடுமையான கண்னத்துக்கு உள்ளாகியுள்ளார். அவர் எழுதியது: #Amy Winehouse before it was too late. Can anyone reach Washington before it's too late? Both addicted - same fate???