சாகா வரம் வேண்டுமா?


சிற்றூர் ஒன்றில் ஒரு சிறு குடும்பம். குடும்பத்தலைவன் துணையில்லாத நிலையில் பத்துவயதான தன் ஒரே மகனுடன் வசித்து வந்தாள் அந்த தாய். தன் எதிர்காலத்தை அந்த மகனின் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்ட சராசரி இந்திய நடுத்தரவர்க்க தாய். மகனின் எதிர்கால வாழ்க்கை ஒன்றைப் பற்றியே கடவுளிடம் நித்தம் வேண்டிக் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில் ஒரு பேரிடி. சாலையில் விளையாடிக்கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுவன், எதிர்பாரதவிதமாக சாலை விபத்தில் சிக்கி உயிர்நீத்தான். ஏற்கனவே துணைவன் இல்லாத அந்த அபலைப்பெண் இப்போது தன் ஒரே மகனும் இறந்துவிட, மீளாத் துயர் கொண்டார். வாழ்வின் பிடிப்பற்றவராய், கடவுளிடம் கோபம் கொண்டார்.
"நித்தம் உன்னையே வேண்டிக்கிடந்தேனே!! என் பக்தி பொய்யா? என் கடமை உண்மையில்லையா? எந்த வரமுமே கேட்காத எனக்கு ஏன், இருளை சாபமாக அளித்தாய்?" என கடவுளிடம் மன்றாடினார். அந்த ஏழைத் தாயின் துயர்குரல் கேட்டு அவள் முன் தோன்றினார் கடவுள்!! " என் மகளே !! இந்த உலகில் தோன்றிய அனைவருமே ஒருநாள் இறக்கக் கூடியவர்களே, உன் மகனும் உலக நியதியான சாவை அடைந்தானே அன்றி, இது உனக்கு வழங்கப்பட்ட சாபம் அல்ல" எனச் சொல்லி சாந்தப்படுத்த முயன்றார். அவர் சொன்ன எதனையும் கேட்கும் மனநினையில் இல்லை, மகனையிழந்த அந்த தாய். மகனின் உயிர் மீட்குமாறு மன்றாடினார். கடவுளின் எந்த சமாதானமும் உண்மை நிலையை அவருக்கு உணர்த்தமுடியவில்லை.

முடிவாய் கடவுள் இப்படி சொன்னார், " சரி மகளே !! உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க நான் சம்மதிக்கிறேன், ஆனால் ஒரு நிபந்தனை !!", அவரே தொடர்ந்தார், " இந்த ஊரில் எவரொருவர் வீட்டில் இதுவரை மரணம் நிகழ்ந்ததில்லையோ, அவரிடம் சென்று ஒருப்படி தானியம் வாங்கி வா!! நான் உன் மகனை மீண்டும் உயிர்ப்பிக்க செய்கிறேன்" என்றார்.

தன் மகன் மீண்டும் உயிர்த்தெழ நம்பிக்கைக் கொண்ட அந்தப் பெண் அவ்வூரின் ஒவ்வொரு வீடாக சென்றாயினும், மரணம் இல்லாத வீட்டை அடைய முடிவுசெய்தார். முதல் வீட்டை அடைந்தார், ஒருப்படி தானியம் கேட்டவர் அவர்கள் தானியத்தை தர விளையுமுன் கடவுள் சொன்னதை கேட்டார், " உங்கள் வீட்டில் யாரேனும் மரணம் அடைந்ததுண்டா? ", சென்ற ஆண்டு அவர்கள் வீட்டில் அத்தை மரணமடைந்ததைக் குறிப்பிடவே, அடுத்த வீட்டிற்கு சென்றார். எப்படி ஒவ்வொரு வீடாக சென்றுக் கேட்டார்.. அவர்களும் அத்தையோ, மாமாவோ, அம்மா, அப்பா, மகன், மகள் - என ஏதாவது ஒரு உறவினர்களை இழந்தவர்களாகவே இருந்தனர்.. இறுதியாக எல்லா வீடுகளிலும் சோதித்து கடவுளிடம் திரும்பினார் அந்தப் பெண்.

கடவுள் சொன்னார், " மகளே!! மரணம் உலக நிகழ்வுகளில் ஒன்று!! இது யாருக்கும் தரப்படும் சாபம் அல்ல!! யாருடைய மரணமும் இயற்கையே" என்று அந்த பெண்ணை தெளிவுப்படுத்தி அனுப்பினார். மரணம் மாற்றமுடியாத இயற்க்கை நிகழ்வு, அதை நாம் உணர்ந்து நம் வாழ்க்கையை தொடரவேண்டும் என்ற உண்மை உணர்ந்தவராய் நகர்ந்தார் அந்தப்பெண்..

நமக்கேன் இந்த கதை?
மகனின் மரணத்தை ஏற்க மறுக்கும் அந்த பெண்ணின் மனநிலையே, பங்கு வர்த்தகத்தில் நட்டத்தை ஏற்க மறுப்பதின் பின்னுமுள்ளது!!

மீண்டும் ஒருமுறை பங்குவர்த்தகத்தை நிகழ்நிலை( Spot trading) வர்த்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறேன். ஒரு வணிகர் தன் எல்லா வர்த்தகத்திலுமே ஒரே அளவு லாபம் வரவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. வாடிக்கையாளருக்கு தகுந்ததுப்போல் தன் லாபவிகிதத்தை மாற்றி அமைக்க அவர் தயங்குவதில்லை. நிகழ்நிலை வர்த்தகத்தில் நட்டம் ஏற்படாமல் முடிவெடுக்க வர்த்தகருக்கு காலஅவகாசம் உள்ளது. ஆனால் ஆன்லைன் வர்த்தகத்தில் அவ்வாறன காலஅவகாசம் பங்குவர்த்தகருக்கு இருப்பதில்லை, உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவே லாப நட்டம் இரண்டையுமே ஏற்கும் மனோபக்குவம் கண்டிப்பாக ஒரு பங்கு வர்த்தகருக்கு வேண்டும்.

பங்குவர்த்தகத்தில் நட்டம் என்பது, நம் லாப விகிதத்தை குறைக்கும் செயல் அல்ல. இங்கு நட்டத்தை வர்த்தகர் ஏற்க வேண்டுமென நாம் குறிப்பிடுவது, ஸ்டாப் லாஸ் (STOP LOSS) ஆர்டரைப் பற்றி..
உடனடியாக மாறிக்கொண்டே இருக்கும் பங்கு வர்த்தகத்தில் அதற்கு தகுந்தார்ப்போல் உடனடியாக முடிவெடுப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். எனவேதான் உங்கள் ஒவ்வொரு வர்த்தகத்திற்கான ENTRY & EXIT இரண்டுமே முன்க்குட்டியே முடிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் (பங்கு ஆய்வாளரின் துணையோடு இது சாத்தியப் படும்). ஒருமுறை ENTER (BUY / SELL) ஆகிவிட்டால் உங்கள் NEARBY TARGET அல்லது STRICT STOP LOSS - இந்த இடங்களில் வெளியேறுவது எவ்வளவு முக்கியமென நாம் உணர்திருக்க வேண்டும்.

நட்டத்தையும் ஏற்று பங்கு வர்த்தகத்தில் நிகர லாபம் ஈட்டுவது என்பது ஒரு மந்திரம் அல்ல - அது ஒரு கலை...

MARKET IS NOT A MAGIC - IT IS A SYSTEM

Rajesh V Ravanappan

0 comments: