கிங்ஃபிஷர் வழியில் ஜெட் ஏர்வேஸ்...


நிதி நெருக்கடி என்ற கிங்ஃபிஷரின் ஒப்பாரியை விரைவில் ஜெட் ஏர்வேஸும் பாடக்கூடும் எனத் தெரிகிறது.

அதற்கு முன்னோட்டமாக, ஜெட் ஏர்வேஸ் விரைவில் கூடுதல் நிதியை உருவாக்க வேண்டும், பண ஓட்டத்தை சீராக்க வேண்டும் என்று அந்நிறுவன ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கிங்ஃபிஷர் நிறுவனம் கிட்டத்தட்ட திவால் என்று கூறிக் கொண்டு வங்கிகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களிடம் கடன் கேட்டு நிற்பதற்கு முன், இதே ஆடிட்டர்கள் இப்படித்தான் 'எச்சரித்தனர்' என்பதால், இது திட்டமிட்ட நாடகமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்தான் இந்தியாவில் மிகப்பெரிய தனியார் விமான சேவை நிறுவனம். லாபத்தில் இயங்குவதாக கூறிக் கொண்டாலும், அடிக்கடி நஷ்டக் கணக்கும் காட்டி வருகிறது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அரசு உதவி வேண்டும் என்று கோரவும் தவறுவதில்லை ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல்.

சமீபத்தில் கிங்பிஷர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி கிட்டத்தட்ட திவால் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நரேஷ் கோயல் உடனே 'கிங்ஃபிஷருக்கு அரசு பெயில் அவுட் தர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் இப்போது, கிங்ஃபிரைப் போலவே நிதிப் பற்றாக்குறை ஜெட் ஏர்வேஸுக்கு வந்துள்ளதாக அதன் ஆடிட்டர்கள் எச்சரித்துள்ளனர். ஜெட்லைட் பிரிவால் இந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டம் கண்டு வருவதால் இந்த நிலை என்றும் ஆடிட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 'இது நாடகமாக இருக்காது என நம்புவோம். காரணம் விஜய் மல்லையாவின் பிஸினஸ் ஸ்டைல் வேறு, ஜெட் ஏர்வேஸின் வர்த்தக பாணி வேறு. சர்வதேச விமான சேவைகளைக் கொண்டுள்ளது ஜெட் ஏர்வேஸ். எனவே நெருக்கடியை அந்த நிறுவனம் சமாளித்துவிடும்,' என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.