பங்குச்சந்தை செய்திகள்


பங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்!



இந்திய பங்குச் சந்தை மூலமாக பயங்கரவாதிகளுக்கு பெருமளவில் பணம் சென்றிருக்கும் விவரத்தை நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 முறை பங்குச் சந்தை மூலம் இப்படி பணம் சென்றுள்ளதற்கான ஆதாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.

இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பங்குச் சந்தையில் சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் பரிமாற்றமும் இதில் நடந்துள்ளது.

இதில் இடைத் தரகர்கள், பங்குச் சந்தை சார்ந்த சில நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றன," என்றார்.

இந்திய தொழில்துறை வளர்ச்சி பெரும் சரிவு!: 8.7%லிருந்து 3.5% ஆக குறைந்தது!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி 5.1 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி வெறும் 3.5 சதவீதமாக சுருங்கிவிட்டது.

தொழில்துறையில் 76 சதவீதத்தை உற்பத்தித் துறை தான் பூர்த்தி செய்கிறது. இந்தத் துறையில் தான் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுரங்கத்துறை, மின் உற்பத்தித் துறை, ரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

மருத்துவ உபகரணங்கள், வாட்சுகள், பாய்லர்கள், பழச்சாறு, தோல் பொருட்கள், மார்பிள்கள்-டைல்கள், அரிசி உற்பத்தி உள்ளிட்ட சில பிரிவுகள் தான் வளர்ச்சியை சந்தித்துள்ளன.