தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள்


கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது.

சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.

போஜோ நிறுவனமும் போனது

தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை நிர்மாணிப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க அந்த நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தன.

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு சென்ற பின்னர் அம்மாநிலத்தை நோக்கி பிற கார் தயாரிப்பாளர்களும் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் விலை மிகக்குறைந்த கார் டாடா நானோ

இந்தியாவில் மலிவான டாடா நானோ கார்

கார் உற்பத்தி நிறுவனங்களின் முதல் தேர்வாக தமிழகம் ஏன் இல்லை என்ற கேள்விக்கு, இதற்கு மின் தட்டுப்பாடே முக்கிய காரணம் என்று பிக்கி என்ற இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தமிழகத்திற்கான தலைவர் ரஃபீக் அகமது கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்படும் ஹூண்டாய் தொழிற்சாலையில் கடந்த பல மாதங்களாக நிலவும் தொழிலாளர் பிரச்சனையும் நிலமையை சற்று பாதகமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரம் தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான பல அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினாலேயே முதலீடுகள் தொடர்ந்து வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இணையம் தோன்றி இருபது ஆண்டுகள்

இன்று நாம் எல்லோம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்ற வோர்ல்ட் வைட் வெப்(www)எனப்படும் கணினி வலயத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் தொடங்கி இருபது வருடங்கள் ஆகின்றன.

ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும் உலக அளவில் கணினி வலயமைப்பில் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு எளிய முறையை பேராசிரியர் டிம் பர்னர்ஸ் லீ உருவாக்கியிருந்தார்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்றுக்கு முன்பாக இண்டர்நெட் என்பது விஞ்ஞானிகள் தங்களுக்கு இடையில் தகவல் பரிமாறுவதற்கான ஒரு வழியாகவே இருந்துவந்தது.

வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு இயந்திர மொழியைப் பயன்படுத்தியதாலும் ஆவணங்கள் பல்வேறு கணிணி வடிவங்களில் இருந்ததாலும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலும் சிரமமும் நிறைந்த ஒன்றாக இருந்துவந்தது.

அச்சமயம் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த சர் டிம் பர்னர்ஸ் லீ, கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார்.

இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்துடன் எளிதில் இணைப்பதற்கு, அதாவது ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த ஆவணத்துக்கு சென்றுவிடலாம் என்ற முறையில் இணைப்பதற்கு, இந்த HTML வழிவகுத்தது.

மிகவும் சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாகத் தெரியும் இந்த கண்டுபிடிப்புதான் இன்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இணையமாக வொர்ல்ட் வைட் வெப்பாக உருவெடுத்துள்ளது.

மூன்று மாத உழைப்பில் டிம் பர்னர்ஸ் லீ கண்டுபிடித்த அந்த இணையத்தை இன்று உலகின் முப்பது சதவீதமான மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.

வீழ்ச்சியை நோக்கி உலகப் பொருளாதாரம்

அமெரிக்காவும், யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குள் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். எச்சரித்துள்ளது.

அப்படியொரு பொருளாதார வீழ்ச்சி வருமானால் மற்ற நாடுகளும் அதனால் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என்று அது கூறியுள்ளது.

பங்குச் சந்தை.

உலக பொருளாதாரம் ஆபத்தானதொரு புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது என்று ஐ.எம்.எஃப்.வெளியிட்டுள்ள புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.

வட்டி விகிதங்களைக் குறைக்க ஐரோப்பிய மத்திய வங்கி தயாராக வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கம் அவசர அவசரமாக நிதிக் குறைப்புகளை செய்யப்போய் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமடைவதற்கான ஆபத்து இருக்கவே செய்வதாக ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!


US Poverty
அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இது கடந்த 50 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச எண்ணிக்கை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதலே வறுமைக்கோடு என்ற அளவீடு இருந்துவருகிறது.

அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது அவர்களின் பொருளாதார நிலை, தேவையின் அடிப்படையில் இந்த ரூ 10 லட்சம் மிகக் குறைந்த தொகையாகும்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸிஸிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஸோனா போன்ற மாநிலங்களும் வறுமையில் வாடுவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஆட்டம் காணும் அமெரிக்க பொருளாதாரம்


பொருளாதார வலிமையில் உலகின் மிகப் பெரிய நாடு என்ற பெருமைக்குச் சொந்தமான அமெரிக்கா, கடந்த 94 ஆண்டுகளாக கடன்பத்திர தர மதிப்பீட்டில் 'ஏஏஏ' என்ற உயர் அந்தஸ்தை பெற்றிருந்தது. இதனால், அந்நாட்டின் கடன்பத்திரங்களில் எவ்வித அச்சமுமின்றி தைரியமாக முதலீடு செய்யலாம். இதனால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட

பல நாடுகள் அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்வதை சிறந்த வாய்ப்பாக கருதி வந்துள்ளன.

இந்நிலையில், கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆலோசனை வழங்கி வரும் ஸ்டாண்டர்டு - பூர்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கடன்பத்திர மதிப்பீட்டு அந்தஸ்தை 'ஏஏ+'-ஆக குறைத்துள்ளது.

இதனால், அமெரிக்க கடன்பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டும். அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிக்கும்.

கடந்த 2010-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் 41,400 கோடி டாலராக இருந்தது. இது, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாகும். கடன்பத்திர தர மதிப்பீட்டை குறைத்துள்ளதால், அமெரிக்காவின் வட்டிச் செலவினம் ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் அதிகரிக்கும் என ஜே.பி.மார்கன் சேஸ் - கோ தெரிவித்துள்ளது.

ஆக, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது

சாதனையாளர்

வெறும் 50 பைசாவில் வாழ்க்கையைத் தொடங்கியவரின் இன்றைய ஒரு நாள் வருமானம் ரூ.2 லட்சமாம். இவர் பெரிய தொழிலதிபரின் மகளும் அல்ல, மனைவியும் அல்ல.

சென்னை மெரினா கடற்கரையில் 50 பைசாவுக்கு காபி, விற்றவர் இன்று பல ஹோட்டல்களுக்கு முதலாளி. இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்கி)யின் கடந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதைச் தட்டிச் சென்றவர் பெட்ரிஷியா.

காலத்தின் கட்டாயம் இவரை தொழிலதிபராக மாற்றியது என்று கூடச் சொல்லலாம். தன் திருமண வாழ்க்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

வேளச்சேரியில் வசித்து வரும் அவருடனான சந்திப்பிலிருந்து...

உங்களது ஆரம்பம் எது?

கட்டுப்பாடான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த நான் வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொண்டேன். கணவர் போதைக்கு அடிமையானதால், எனது வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. அவரைத் திருத்துவதற்கு முயன்றும் முடியாமல் போனது.

என் இரண்டு சிறிய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனியாக தொழில் தொடங்க முன்வந்தேன். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு கணவர் வெளியேற, எனது வீட்டில் என் பெற்றோருடன் நானும் எனது குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம்.

தொழில் தொடங்க முடிவெடுத்தது எப்போது?

நான் சமையல் கலையில் ஏற்கெனவே டிப்ளமோ பெற்றிருந்தேன். சமையலில் புதிது புதிதாக எதையாவது புகுத்திக் கொண்டே இருப்பேன். முதன் முதலாக சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே ஒரு ஸ்டால் வைத்தேன்.

முதல் நாளில் வெறும் 50 பைசாவுக்கு ஒரு காபி மட்டுமே விற்றது. விற்பனை ஆகவில்லையே என்பதைவிட நான் சமைத்த வகைகளை யாரும் சாப்பிடவில்லையே என்பதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது.

50 பைசா கிடைத்ததே கடவுளின் கருணைதான் என்று என் அம்மாதான் ஆறுதல் கூறினார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனையானது. அதிலிருந்து எனக்கு ஏறுமுகம்தான். திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தேன்.

வெற்றி கண்ட உங்களின் அடுத்த படி எதுவாக இருந்தது?

என்னிடம் இருந்த உணவு வகைகளின் தரம் அனைவரையும் கவர்ந்தது. கடற்கரையின் அருகில் இருந்த குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் கேன்டீன் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் கேன்டீன் தொடங்கினேன்.

அதனைத் தொடர்ந்து, ஹோட்டல் தொடங்க முன்வந்து, தனியாக இல்லாமல் மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கினேன். அதன் பின்பு தனியாக தொடங்கினேன். இன்று சுமார் 12 உணவகங்கள் சென்னையில் உள்ளன.

உங்களின் சாதனைப் பயணத்தில் என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள்?

பொருளாதார ரீதியான பிரச்னைகள் இருந்து வந்தது. அந்த சமயத்தில் எனது அம்மாவிடம் சிறு சிறு கடன் பெற்று சமாளித்துவிடுவேன். அதனை சிறிது சிறிதாக அடைத்தும்விடுவேன். பெற்றோரை கஷ்டப்படுத்தி திருமணம் செய்து கொண்டதால், அவர்களை மறுபடியும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து.

இளவயதில் இந்தத் தொழிலுக்கு வந்ததால், சமூக விரோதிகளின் கேலி, கிண்டல், தவறான பார்வை போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளேன். கண் அசைத்தால் கூட அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள். மன தைரியத்தால் மட்டுமே அவர்களை வெற்றி கொண்டேன். மனதில் உறுதி இருந்தால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்.

எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் என் வாழ்க்கைப் பயணத்தில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

24 மணி நேரமும் உழைத்ததால், குழந்தைகளை எவ்வாறு பராமரித்தீர்கள்?

எனது பெற்றோர், தங்கை, தம்பி ஆகியோரின் உதவியால்தான் என் தொழிலில் எனக்கு வெற்றி கிடைத்தது. என் திருமணத்தினால் அவர்களுக்கு நான் கஷ்டத்தைக் கொடுத்த போதிலும், எனக்காக இன்றளவும் உதவி வருகிறார்கள். என் மகன் இங்கிலாந்தில் கடல்சார் பொறியியல் படித்துவிட்டு, இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளதால், இதில் இறங்கிவிட்டான். என் மகளின் மரணம்தான் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது.

என்ன நேர்ந்தது?

திருமணமான ஒரே மாதத்தில் விபத்தில் மகளும், மருமகனும் இறந்து விட்டனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் இறந்தவர்களை இதில் ஏற்றமாட்டோம் என்று கூறிச் சென்றுவிட்டது. இறந்து விட்டார்கள் எனத் தீர்மானிக்க ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் முடியுமா? ஒரு வேளை அவர்கள் பிழைத்திருந்தால்..

இந்த சம்பவத்தால் என்னுடைய தொழிலில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் முழுவதுமாக விலகி விட்டேன். கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மகன்தான் வேலையை விட்டுவிட்டு என் தொழிலை கையில் எடுத்துக் கொண்டான். கடந்த ஆண்டில் இருந்துதான் முழுவதுமாக மறுபடியும் இதில் ஈடுபட்டுள்ளேன்.

என் மகளுக்கு விபத்து நடந்த இடத்தில், ஒரு இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளேன். அந்த இடத்தில் நடக்கும் விபத்துகளுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இன்றி உதவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். வேறு சில இடங்களிலும் இதே போன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் உள்ளது என்றார் அவர்.

சிறிய பிரச்னைகளுக்கே துவண்டு போய் எதிர்காலம் குறித்த பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில், தனி ஒரு ஆளாக நின்று இன்று வானளாவ உயர்ந்துள்ளவரின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நன்றி : தினமணி