சந்தை எங்கே செல்கிறது?





நாட்டின் பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், பங்குச் சந்தையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.சென்ற வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 3 புள்ளிகள் குறைந்து, 17,557.74 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 2.55 புள்ளிகள் சரிவடைந்து, 5,320.40 புள்ளிகளிலும் நிலைகொண்டன. ஒட்டு மொத்த அளவில், "சென்செக்ஸ்' 144.78 புள்ளிகள் அதிகரித்திருந்தது.

கொள்கை திட்டங்கள்:மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள சிதம்பரம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கொள்கை திட்டங்களில் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். மேலும், கையிருப்பில் உள்ள உணவு தானியங்களை பயன்படுத்தி, விலை உயர்வை கட்டுக்குள் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதுடன், இறக்குமதி மூலம், பற்றாக்குறையும் சமாளிக்கப்படும் என்று தெரிவித்தார். நிதியமைச்சரின் அறிவிப்புகள், நம்பிக்கை அளிப்பதாக இருந்ததையடுத்து, பங்கு வர்த்தகத்தில், முன்னேற்றம் காணப்பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து, வெவ்வேறு அமைப்புகள், மாறுபட்ட புள்ளி விவரத்தை அளித்து வருகின்றன. இந்நிலையில், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மைனஸ் 1.8 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், சென்ற மே மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 2.5 சதவீதம் என்றளவிலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 9.5 சதவீதம் என்றளவிலும் வளர்ச்சிகண்டிருந்தது.
பல்வேறு அமைப்புகள், சென்ற ஜூன் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 3.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டிருந்தன. ஆனால், இந்த மதிப்பீடுகளை எல்லாம், பொய்யாக்கும் வகையில், தொழில் துறை குறியீட்டு எண், பின்னடவை கண்டுள்ளது. இதனால், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில், இந்திய பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் கண்டது.

உலக சந்தைகள்:இந்திய பங்கு சந்தைகளில், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது என்றாலும், ஒட்டுமொத்த அளவில், 1.9 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதர நாடுகளிலும், பங்கு வியாபாரம் பொதுவாக நன்கு இருந்தது என்றே சொல்லலாம். இதற்கு எடுத்து காட்டாக, ஜெர்மன் நாட்டின் பங்கு வர்த்தகம், 4.6 சதவீதம் உயர்ந்திருந்தது.
இதையடுத்து, சீனா (2 சதவீதம்), ஜப்பான் (2.8 சதவீதம்), இங்கிலாந்து (3 சதவீதம்), ஹாங்காங் (2.3 சதவீதம்), அமெரிக்கா (3 சதவீதம்), சிங்கப்பூர் (0.6 சதவீதம்) என்றளவில் உயர்ந்திருந்தது.


மூலப்பொருட்களின் விலை உயர்வு, வட்டி செலவினம் அதிகமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையிலும், சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை, 7.53 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து, சென்ற வியாழனன்று, செய்தி வெளியானதை அடுத்து, அன்றைய தினம், வாகன துறையை சேர்ந்த நிறுவன பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.

நடப்பு கணக்கு பற்றாக்குறை:நாட்டின் இறக்குமதி குறைந்துள்ளதால், நடுத்தர கால அடிப்படையில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2.8 சதவீதமாக நீடிக்க வாய்ப்புள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் நிலையில், அது, அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வதற்கும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வலுவடைவதற்கும் வழிவகுக்கும். எனவே, இது, சாதகமான அம்சமாகும்.

மருத்துவ துறை:மருத்துவச் சேவையில், தற்போது சென்னை, இந்தியாவில் முன்னணி நகரமாக உருவெடுத்துள்ளது. இங்கு, மருத்துவத்திற்கு சிறப்பான வசதிகள் உள்ளதால், உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், சிகிச்சை மேற்கொள்ள வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இத்துறையில் உள்ள, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம், அடுத்த 30 மாதங்களில், இந்தியா முழுவதிலும் உள்ள அதன் மருத்துவமனைகளில், கூடுதலாக, 3,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே, நீண்ட கால அடிப்படையில், இந்நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.

காலாண்டு முடிவுகள்:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான நிதிநிலை முடிவுகள் இன்னும் வந்து கொண்டுள்ளன. நடப்பு வாரத்தில் வெளி வந்துள்ள காலாண்டு முடிவுகளில், பவர் பைனான்ஸ், சன் பார்மா, வி.ஐ.பி.இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு உள்ளன.பொதுத் துறையை சேர்ந்த ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின், நிகர லாபம் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், 137 சதவீதம் வளர்ச்சிகண்டு, 3,752 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலாண்டில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 16.89 சதவீதம் அதிகரித்து, 27,732 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆனால், வங்கியின் நிகர வசூலாகாத கடன், 1.61 சதவீதத்திலிருந்து, 2.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், இவ்வங்கி, பங்கின் விலை, சென்ற வெள்ளியன்று, 4 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்தது. இருப்பினும், இவ்வங்கியின் வசூலாகாத கடன் அதிகரிப்பு என்பது அதிக இடர்பாடு அளிக்கும் அம்சமாக இருக்காது என்றே சொல்லலாம். எனவே, நீண்ட கால அடிப்படையில், இதன் பங்குகளை வாங்கலாம்.

வாங்கக் கூடிய பங்குகள்:பெட்ரோனெட் எல்.என்.ஜி, சன் பார்மா, தல்வால்கர்ஸ் பெட்டர் வேல்யூ பிட்னெஸ், அப்பல்லோ டயர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டிற்கு ஏற்றவை.

வரும் வாரம் எப்படி?உலகளவில், புதிய பிரச்னைகள் எதுவும் தென்படவில்லை. உள்நாட்டிலும், ஒட்டுமொத்த அளவில், சாதகமான அம்சங்களே தென்படுகின்றன. எனவே, வரும் வாரத்தில், பங்கு வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்படவே வாய்ப்புகள் உள்ளன.