அமெரிக்கா: பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்வு!


US Poverty
அமெரிக்காவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 4.5 கோடி பேர் என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

இது கடந்த 50 ஆண்டுகளில் காணாத அதிகபட்ச எண்ணிக்கை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிலும் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அங்கு கடந்த 1983-ம் ஆண்டு முதலே வறுமைக்கோடு என்ற அளவீடு இருந்துவருகிறது.

அமெரிக்காவில் ஒரு நபரின் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் வறுமையில் வாடுபவர்களாக கருதப்படுகின்றனர். அதாவது அவர்களின் பொருளாதார நிலை, தேவையின் அடிப்படையில் இந்த ரூ 10 லட்சம் மிகக் குறைந்த தொகையாகும்.

இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பசி பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 4 கோடியே 62 லட்சம் பேர் பட்டினியால் வாடுவதாக தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இது அமெரிக்க மக்கள் தொகையில் 6-ல் ஒருபங்கு ஆகும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாகாணங்களில் மிஸிஸிப்பி முதலிடம் வகிக்கிறது. அங்கு 22.07 சதவீதம் பேர் வறுமையில் வாடுகின்றனர். அதைத் தொடர்ந்து லூசியானா, கொலம்பியா, ஜார்ஜியா, நியூமெக்சிகோ, அரிஸோனா போன்ற மாநிலங்களும் வறுமையில் வாடுவதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.