பணக்காரர்கள்



டெல்லி: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ள சாவித்ரி ஜிந்தால் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணி ஆவார். முகேஷ் அம்பானி முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.

பணக்கார இந்தியர்கள் பட்டியலை அமெரிக்காவின் முன்னணி பப்ளிஷிங் மற்றும் மீடியா நிறுவனமான போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து 4வது முறையாக முதல் இடத்தில் உள்ளார் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி. அவரது சொத்து மதிப்பு 22.6 பில்லியன் டாலர். ஆனால் அவரது தம்பி அனில் அம்பானி 10வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

19.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள ஸ்டீல் நிறுவன அதிபர் லக்ஷ்மி மிட்டல் இரண்டாவது இடத்தில் உள்ளார். விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி 3வது இடத்திலும், 9.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சாவித்ரி ஜிந்தால் 5வது இடத்திலும் உள்ளனர். இன்றைய தேதிக்கு இந்தியாவின் பணக்காரப் பெண் சாவித்ரி ஜிந்தால் தான்.

இந்த பணக்கார பட்டியிலில் 14 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ராகுல் பாட்டியா மற்றும் ஆனந்த் மஹிந்திரா ஆகியோர் பெயர்கள் முதன்முறையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்த பட்டியிலில் இருந்த வினோத் கோயன்கா மற்றும் ஷாஹித் பால்வா ஆகியோரின் பெயர்கள் தற்போது இல்லை. அவர்கள் இருவரும் 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பணக்கார அம்மா சாவித்ரி ஜின்டால்


உலகின் பணக்கார அம்மாக்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் சாவித்ரி ஜின்டால். ஆசிய அளவில் முதலிடத்தில் இருக்கும் பணக்கார அம்மா இவரே!

பணக்கார அம்மாக்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் 70 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச தாய்மார்கள் தினத்தையொட்டி பணக்கார அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ்.

ஓ.பி. ஜின்டால் குழுமத்தை உருவாக்கிய ஓம் பிரகாஷ் ஜின்டாலின் மனைவியான சாவித்ரி ஜின்டாலின் நிகர சொத்து மதிப்பு 1,220 கோடி டாலர் (ரூ. 55,000 கோடி). 60 வயதாகும் சாவித்ரிக்கு 9 குழந்தைகள் உள்ளனர்.

ஓ.பி. ஜின்டால் குழுமம் ஸ்டீல் மற்றும் மின்னுற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தை ஓ.பி. ஜின்டால் 1952ல் உருவாக்கினார். 2005ம் ஆண்டு நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஓம் பிரகாஷ் ஜின்டால் உயிரிழந்ததைத் தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுமத்தில் பொறுப்புகள் அற்ற இயக்குநராக பதவியேற்றார்.

ஏனெனில் ஜின்டால் உயிருடன் இருந்தபோதே தனது நிறுவனப் பொறுப்புகளை நான்கு மகன்கள் பிருத்விராஜ், சஜன், ரத்தன், நவீன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். தற்போது இவர்கள் நால்வரும் தனித்தனி பிரிவுகளுக்கு தலைமை ஏற்று நடத்துகின்றனர்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில் 70 பேர் இடம் பெற்றிருந்தபோதிலும் 2 பேர் மட்டுமே தங்களது சொந்த வருவாய் மூலம் கோடீஸ்வர அம்மாக்களாக திகழ்கின்றனர்.

இதில் ஹாரி பாட்டர் கதையை எழுதி கோடீஸ்வரியான ஜே.கே. ரவ்லிங்கும் ஒருவர். மற்றொருவர் எம்இஜி விட்மன்.

பணக்கார அம்மாக்கள் பட்டியலில், கணவர் மூலம் கோடீஸ்வரிகளான தாய்மார்களே அதிகம். சில கோடீஸ்வர குடும்பங்களின் வாரிசுகளும் இதில் உள்ளனர்.

வால்மார்ட் தொடர் நிறுவனத்தை உருவாக்கிய சாம் வால்டனின் மருமகள் கிறிஸ்டி வால்டன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 2,250 கோடி டாலராகும்.

உலகம் முழுவதும் பிரபலமான அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான லோரியல் குழுமத்தின் லிலியேன் பெடன்கோர்ட் (87) இரண்டாவது இடத்திலும், பேக்கேஜிங் துறையின் பிரபலமான டெட்ரா லேவல் குழுமத்தைச் சேர்ந்த பிர்கிட் ராஸிங் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக சாவித்ரி ஜின்டால் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார் சாவித்ரி.

இவரது மகன்களில் ஒருவரான நவீன் ஜின்டால், ஹரியாணாவின் குருஷேத்ரா தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார்.