மக்களவைத் தேர்தலையொட்டி வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமார் 23 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் நாடு திரும்பிவிட்டது என்று மும்பையில் உள்ள நிதி நிர்வாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருப்புப் பணம் இந்தியாவுக்குள் திரும்பி வருகிறது என்பதற்கு என்ன ஆதாரம் என்று அந்த வட்டாரங்களிடம் கேட்டபோது, பங்குச் சந்தையில் ஏற்படும் அர்த்தம் புரியாத எழுச்சி, ஹவாலா சந்தைகளில் காணப்படும் சுறுசுறுப்பு, தங்கக் கடத்தல் அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் நாடு முழுக்க ஏற்பட்டுள்ள திடீர் சுறுசுறுப்பு ஆகியவைதான் என்கின்றனர்.
பங்குச் சந்தையில் திடீரென புள்ளிகள் உயர்ந்து வருகின்றன. ஆனால் தொழில்துறையில் பெரிய அளவில் மீட்சி ஏற்பட்டுவிடவில்லை. உற்பத்தியும் பெருகவில்லை. மின்சார சப்ளையைக் கண்காணித்து வருவோர் கடந்த சில நாட்களாக மின்பற்றாக்குறை குறைந்து வருகிறது என்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் 3 முக்கிய காரணங்கள், மின்உற்பத்தி அதிகரித்து வருகிறது. மின்உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரித்ததைவிட அதிகம் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. பெரிய தொழிற்சாலைகள் முழு வீச்சில் வேலை செய்யாததால் மின் நுகர்வு குறைந்திருக்கிறது என்பதாகும்.

கருப்புப் பணம் எவ்வளவு?
நம் நாட்டில் திரளும் கருப்புப் பணம் எவ்வளவு என்று எவருக்கும் தெரியாது. அரசிடம் புள்ளிவிவரம் கிடையாது. சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதன் ஒரு பகுதி உள்நாட்டிலும் பெரும்பகுதி வெளிநாட்டிலும் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
நரேந்திர மோடிதான் பிரதமராக வருவார் என்று தொழில், வர்த்தக வட்டாரங்கள் நம்புகின்றன. ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்பதுதான் முதல் வேலை என்று மோடி பேசியிருக்கிறார். அதற்கு அஞ்சியல்ல, அவர் வந்து பார்க்கும்போது எதுவும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தப் பணம் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.



சுவாமி சொன்னது என்ன?
இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிட்சர்லாந்து வங்கிகள் உள்பட வெளிநாடுகளில் இருக்கிறதா? யார் சொன்னது? எல்லாம் இந்தியா திரும்பிவிட்டது என்று சுப்பிரமணியன் சுவாமி சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே கருப்புப் பணம் சிறிதுசிறிதாக திரும்பிக் கொண்டிருக்கிறது என்று ஒரு தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுநீல் பச்சிசியா தெரிவிக்கிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ரூ.1,500 கோடியிலிருந்து ரூ.5,000 கோடி வரை திரும்பியிருக்கிறதாம். இந்த கருப்புப் பணம் வியாபாரத்திலிருந்து மட்டுமல்ல, ஊழல் பரிமாற்றங்களிலும் கிடைத்திருக்கலாம் என்கிறார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்கள், சரக்குச் சந்தையில் நடந்த மொத்த விற்றுமுதல்கள், பங்குச் சந்தையில் புரண்ட விற்றுமுதல்கள், தங்கம் – வெள்ளியாக வாங்க செலவிடப்பட்ட தொகை, தரகர்களுக்குக் கிடைத்த தொகை, கணக்கில் வராத – அதிகாரபூர்வமற்ற சந்தைகளில் வெளியான சில வியாபாரத் தகவல்கள் ஆகியவற்றையெல்லாம் அலசிப்பார்த்து கருப்புப் பண அளவு மொத்தம் 23 லட்சம் கோடி ரூபாய் என்கிறார் விஜய் ஜாதவ். இவர் கணக்குத் தணிக்கையாளர். அத்துடன் கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

8000 டன் தங்கம்
வெளிநாடுகளிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டுவர திட்டமிடுவதாக மத்திய அரசு 2000-ம் ஆண்டில் கூறியபோதே விழிப்படைந்த கருப்புப்பண உரிமையாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் படிப்படியாக அந்தப் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவரத் தொடங்கிவிட்டனர். பணமாகக் கொண்டுவர முடியாது என்பதால் தங்கமாக வாங்கிக் கொண்டுவந்தார்கள். 7,000 முதல் 8,000 டன்கள் வரை தங்கம் இந்தியாவுக்குள் இப்படி வந்திருக்கிறது.

2003 அக்டோபர் 3-ம் தேதி எம்.சி.எக்ஸ். என்ற பரிவர்த்தனை நிலையத்தைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஒருவர், “இந்தியா ஆண்டுதோறும் 800 டன் தங்கத்தையும் 3,500 டன் வெள்ளியையும் நுகர்கிறது, இந்தத் துறையில் உள்ளவர்கள் அன்றாடம் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்” என்றார். ஆனால் அவர் சொன்ன புள்ளி விவரம் தவறு. அது உலக அளவிலான நுகர்வு. இந்தியாவில் 2002-ல் 467 டன்னும் 2003-ல் 367 டன்னும் தங்கம் 
விற்பனையானது. அப்படியானால் அமைச்சர் கூறிய 800 டன்
 என்ன கணக்கு? வெளிநாடுகளில் தங்கம் எந்தப் பயனும் இல்லாமல் பாதுகாப்பு அறைகளில் தூங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பணக்காரர்களோ பணத்தை வெளிநாடுகளில் சும்மா பதுக்கி வைத்திருக்கின்றனர். எனவே அந்தப் பணத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்கிவிட்டனர் என்கிறார் ஜாதவ்.

பங்குச் சந்தையிலும் கருப்புப் பணம்
பங்குச் சந்தையில் தனியார்கள், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் என்று 3 தரப்பினர் முதலீடு செய்கின்றனர். சில நாட்கள் திடீரென பங்குச் சந்தை புள்ளிகள் உயரும். கேட்டால் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரித்தது என்பார்கள். இப்படி வந்த பணத்தைக் கொண்டுதான் பல நிறுவனங்கள் புதிய தொழில் திட்டங்களையும், வீட்டுமனை, அடுக்கு வீடு தொழிலையும், வணிக வளாகங்களையும் நிறுவி வருகின்றன.

தங்கக் கடத்தல் அதிகரிப்பு
உள்நாட்டில் தங்க நுகர்வு அதிகமாக இருப்பதால்தான் விலை அதிகரிக்கிறது என்று தங்கத்துக்கு சில கட்டுப்பாடுகளை நிதியமைச்சகம் கொண்டுவந்தது. அதனால் தங்க நகை செய்வோர், தங்க நகைகளை ஏற்றுமதி செய்வோர்தான் பாதிப்படைந்தனர். அதே வேளையில், அரசின் நோக்கத்துக்கு மாறாக தங்கக் கடத்தல் அதிகமானது.

ஹவாலாவும் பெருகியது
ரிசர்வ் வங்கியின் வட்டி வீதத்தைவிட சுமார் ஒன்றரை அல்லது இரண்டு சதவீதம் அதிகம் வைத்துத்தான் ஹவாலா வியாபாரிகள் கட்டணம் வசூலிக்கின்றனர். சீனா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் கருப்புப் பணத்தைப் பெற்று இந்தியாவுக்குக் கடத்துவது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்று அந்த வட்டாரங்களிடம் பேசியதில் தெரியவருகிறது.

ரிசர்வ் வங்கி தரும் தகவல்
2000 முதல் 2014 வரையில் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி தரும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்தாலே கருப்புப்பண நடமாட்டம் புலப்படும் என்கிறார் ஜாதவ். ஆனால் ஜாதவ் கூறுவதை வருவாய்ப் புலனாய்வு வட்டாரங்கள் மறுக்கின்றன. அவருடைய புள்ளிவிவரங்களும் தகவல்களும் நம்ப முடியாதவை என்கின்றன.

தேர்தலுக்கான விளம்பரச் செலவு, போக்குவரத்துச் செலவு, வாக்காளர்களை பொதுக்கூட்டங்களுக்கு ‘அழைத்து வர’ ஆகும் செலவு ஆகியவற்றைப் பார்க்கும்போது கருப்புப்பணம் வெளியே வந்துவிட்டதை உணரவே முடிகிறது.