கிரீஸ் :குழப்பத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி



சர்வதேச நிதியமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புகளும் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்தது குறித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் எரிச்சல் அடைந்துள்ளார். "கடந்த முறை முடிவு செய்தது குறித்து, இன்னொரு முறையும் விவாதித்து முடிவெடுக்க முடியாது' என, காட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

"யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி மிக இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. பிரான்சின் கேன்ஸ் நகரில் இன்று துவங்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில், "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி தான் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், கிரீஸ் பிரதமர் ஜார்ஜ் பப்பண்ட்ரீ போட்டுள்ள புது குண்டு, "யூரோ' மண்டலத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

என்ன நடந்தது? : தனது கடன் நெருக்கடி தீர, சர்வதேச நிதியமைப்பு (ஐ.எம்.எப்.,), ஐரோப்பிய யூனியன் (இ.யு.,) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (இ.சி.பி.,) ஆகியவற்றில், கிரீஸ் இரு தவணைகளாக நிதியுதவி பெற்றுள்ளது.

ஆயினும், அதன் கடன் குறையவில்லை என்பதால், கடந்த அக்டோபரில் நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில், மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கிரீசுக்கு கடன் பத்திரங்கள் அளித்த தனியார் நிதி நிறுவனங்கள், தங்கள் கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்து விட வேண்டும். மூன்றாவது தவணையாக, 100 பில்லியன் யூரோ அளிக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசு ஊழியர் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம், ஓய்வூதியம் வெட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் மேற்கொள்ள வேண்டும் என, மூன்று அமைப்புகளும் நிபந்தனை விதித்தன.

பொது ஓட்டெடுப்பு: நிபந்தனையை ஏற்ற கிரீஸ் பிரதமர், அதற்கு பார்லிமென்ட்டின் ஒப்புதலையும் பெற்றார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி பேட்டியளித்த அவர், "மூன்று அமைப்புகள் கோரும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து, கிரீஸ் மக்களிடம் பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும்' என்றார். அவரது இந்த அறிவிப்பு, ஐரோப்பாவில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது.

அமைச்சரவை ஆதரவு: இந்நிலையில், நேற்று, ஏழு மணி நேரம் நடந்த கிரீஸ் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. பொது ஓட்டெடுப்பு இந்தாண்டு டிசம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

எம்.பி.,க்கள் எதிர்ப்பு: எம்.பி.,க்கள் சிலர் பிரதமரை விமர்சித்த போதிலும் ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ஆளும் கட்சியின் ஒரு எம்.பி., தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ஆறு எம்.பி.,க்கள் பிரதமர் ராஜினாமாவை கோரியுள்ளனர். இந்தச் சூழலில், நாளை, ஆளும் கட்சி மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க இருக்கிறது.

ஜெர்மனி எச்சரிக்கை: கிரீஸ் பிரதமரின் அதிரடி அறிவிப்பு குறித்து நேற்று பேட்டியளித்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்,"ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தி முடிவு எடுக்க முடியாது' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிரீஸ் பிடிவாதம்: ஆனால், அதற்கு பதிலளித்த பப்பண்ட்ரீ,"இந்த பொது ஓட்டெடுப்பு, "யூரோ' மண்டலத்தில் கிரீசின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்தும். ஆனால், "யூரோ' கரன்சியில் கிரீஸ் தொடரும்' என்றார்.

குழப்பத்தில் பிரான்ஸ், ஜெர்மனி: ஜி 20 கூட்டத்தில், கிரீஸ் மற்றும் "யூரோ' மண்டலக் கடன் நெருக்கடி விவகாரத்தை முக்கியமாக வைக்கக் கருதிய பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி மற்றும் ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல் இருவரும், இதுகுறித்து குழப்பம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாடுகளும், "யூரோ' ஒப்பந்தம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளன. அதன் மூலம் தான், "யூரோ' கடன் நெருக்கடி ஓரளவு தீரும் என்பது, அவர்களின் நம்பிக்கை. அதற்கு சீனாவும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றனர்.