

ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும் உலக அளவில் கணினி வலயமைப்பில் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு எளிய முறையை பேராசிரியர் டிம் பர்னர்ஸ் லீ உருவாக்கியிருந்தார்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்றுக்கு முன்பாக இண்டர்நெட் என்பது விஞ்ஞானிகள் தங்களுக்கு இடையில் தகவல் பரிமாறுவதற்கான ஒரு வழியாகவே இருந்துவந்தது.
வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு இயந்திர மொழியைப் பயன்படுத்தியதாலும் ஆவணங்கள் பல்வேறு கணிணி வடிவங்களில் இருந்ததாலும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலும் சிரமமும் நிறைந்த ஒன்றாக இருந்துவந்தது.
அச்சமயம் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த சர் டிம் பர்னர்ஸ் லீ, கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார்.
இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்துடன் எளிதில் இணைப்பதற்கு, அதாவது ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த ஆவணத்துக்கு சென்றுவிடலாம் என்ற முறையில் இணைப்பதற்கு, இந்த HTML வழிவகுத்தது.
மிகவும் சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாகத் தெரியும் இந்த கண்டுபிடிப்புதான் இன்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இணையமாக வொர்ல்ட் வைட் வெப்பாக உருவெடுத்துள்ளது.
மூன்று மாத உழைப்பில் டிம் பர்னர்ஸ் லீ கண்டுபிடித்த அந்த இணையத்தை இன்று உலகின் முப்பது சதவீதமான மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.