இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வரும் ஏப்ரல், மே மாதங்களில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மத்திய பட்ஜெட் குறித்து தொழிலகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், "இந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.2 சதவீதமாக இருக்கும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதையும் விட குறைவாக இருக்கும் என்று இப்போது தெரிகிறது. அடுத்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.8 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க முயற்சிப்போம். நிதி நிர்வாகத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறையைவிட, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாகும்.
இதனை சீர் செய்ய ஏற்றுமதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதனை முன்வைத்து தீவிர நடவடிக்கைகள் வேண்டியுள்ளது. அதிக அளவில் முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துச் சொல்ல ஏப்ரல், மே மாதங்களில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இருக்கிறார் .
செபி தலைவர் யு.கே.சின்ஹா வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை கூடுதல் முதலீடு செய்ய அழைக்கும் விதமாக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பேச இருக்கிறார்.