நிறுவனங்களின் முன் கூட்டிய வரியில் முன்னேற்றம்



நடப்பு 2012-13ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள், ஒரு நிதியாண்டிற்கு, நான்கு தவணைகளில், முன்கூட்டிய வரியை செலுத்துகின்றன.இவ்வகையில், நடப்பு நிதியாண்டின், செப்டம்பர் 15ம் தேதிக்குள் (இரண்டாவது தவணை), நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட அதிகரித்துள்ளது.

பெரும்பான்மையான நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் செலுத்திய வரி நல்ல அளவில் உயர்ந்துள்ளது."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்' என்பது போல, இதுவரை முன்கூட்டிய வரி செலுத்தியுள்ள நிறுவனங்களுள், எல்.ஐ.சி., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், செலுத்தியுள்ள முன்கூட்டிய வரி, 1,300 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 1,165 கோடி ரூபாயாக இருந்தது.இதே காலாண்டுகளில், எச்.டீ.எப்.சி. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 2.38 சதவீதம் அதிகரித்து, 800 கோடி ரூபாயிலிருந்து, 1,100 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் செலுத்திய முன்கூட்டிய வரி, 4.97 சதவீதம் வளர்ச்சிகண்டு, 650 கோடி
ரூபாயிலிருந்து, 815 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுத் துறையை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா செலுத்திய வரி, 600 கோடி ரூபாயிலிருந்து, 620 கோடி ரூபாயாகவும், தேனா பேங்க் செலுத்திய வரி, 77 கோடி ரூபாயிலிருந்து, 180 கோடி ரூபாயாகவும் அதிகரித்துஉள்ளன. வெளிநாட்டு வங்கியான சிட்டி பேங்க் செலுத்திய வரி, 100 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நுகர்பொருள் துறையில், முன்னணியில் உள்ள இந்துஸ்தான் யூனிலீவர் செலுத்திய வரி, 190 கோடி ரூபாயிலிருந்து, 300 கோடி ரூபாயாகவும், அம்புஜா சிமென்ட்ஸ் செலுத்திய வரி, 95 கோடியிலிருந்து, 160 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.


மோட்டார் வாகனத் துறையை சேர்ந்த மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், செலுத்திய முன்கூட்டிய வரி, 176 கோடி ரூபாயிலிருந்து, 200 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிறுவனம், செலுத்தும் முன்கூட்டிய வரியை வைத்து, அக்காலாண்டில், அந்நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதாவது, குறிப்பிட்ட காலாண்டில், ஒரு நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி அதிகரித்திருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் நல்ல அளவில் உயர்ந்திருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.