"பிரிமியம்' வகை பெட்ரோல், டீசல் உற்பத்தி நிறுத்தப்பட்டது


பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், "பிரிமியம்' வகை பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, தெரிய வந்துள்ளது.சாதாரண வகை பெட்ரோல், டீசலை விட,"பிரிமியம்' வகைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், நுகர்வோர் எவரும் இவ்வகை பெட்ரோல், டீசலை வாங்குவதில்லை.இதன் காரணமாகவே, எண்ணெய் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, கூறப்படுகிறது.

 சென்ற மாதம், மத்திய அரசு, சாதாரண வகை பெட்ரோல் மீதான கலால் வரியை, லிட்டருக்கு, 5.50 ரூபாய் குறைத்து, 9.28 ரூபாயாக நிர்ணயித்தது. அதேசமயம், உயர் வகை பெட்ரோல் மீதான கலால் வரியில் எவ்வித மாற்றமும் செய்யாமல், 15.96 ரூபாய் என்ற அளவிலேயே வைத்துள்ளது. இதேபோன்று, உயர் வகை டீசல் மீதான கலால் வரியும் குறைக்கப்படவில்லை.விலை உயர்வுக்கு பிறகு, டில்லியில், உயர் வகை டீசலின் விலை, லிட்டருக்கு, 43 சதவீதம் அதிகரித்து, 65.81 ஆகவும், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 9 சதவீதம் உயர்ந்து, 77.58 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேசமயம், ஒரு லிட்டர் சாதாரண வகை, பெட்ரோலின் விலை, 67.90 ஆகவும், மானிய விலையில் விற்கப்படும், டீசல் விலை, 46.95 ரூபாயாகவும் உள்ளன.அதிக விலை வித்தியாசத்தால், உயர் வகை டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை முழுவதுமாக நின்று விட்டது. எனவே, எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இவற்றின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (சந்தைப்படுத்துதல்) மார்க்கண்ட் நீனி,  தெரிவித்தார்.