மறைமுக வரி வசூல் ரூ. 2.85 லட்சம் கோடி


நடப்பு நிதி ஆண்டில் பரவலாக தேக்க நிலை நிலவியபோதிலும் மறைமுக வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான 9 மாத காலத்தில் ரூ. 2,85,787 கோடி வசூலாகியுள்ளது. சேவைத் துறை வரி மிக அதிக அளவில் வசூலானதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

மறைமுக வரி விதிப்பில் சுங்கத்துறை, மத்திய உற்பத்தி வரி மற்றும் சேவை வரி ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் ரூ. 2,46,168 கோடி வசூலானது.

வரி வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதால், பட்ஜெட் இலக்கான ரூ. 3,92,908 கோடியை நடப்பு நிதி ஆண்டில் எட்ட முடியும் என்று மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரித்துறை தலைவர் எஸ்.கே. கோயல் தெரிவித்தார்.

2011-12-ம் நிதி ஆண்டின் மூன்று காலாண்டுகளில் பட்ஜெட் எதிர்பார்ப்பைவிட வரி வசூல் 72 சதவீதம் அதிகம் வசூலாகியுள்ளது. பெட்ரோலியம் பொருள் மீதான சுங்க வரி குறைப்பால் அரசுக்கு ரூ. 36 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டபோதிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பெட்ரோலியப் பொருள் விலை உயர்வைத் தவிர்ப்பதற்காக வரியை மத்திய அரசு குறைத்தது. டிசம்பர் மாதத்தில் வரி வசூல் 15.9 சதவீதம் உயர்ந்து ரூ. 34,819 கோடியானது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 30,054 கோடி வசூலானது.

மத்திய உற்பத்தி வரி வசூல் 9.7 சதவீதம் உயர்ந்து ரூ. 12,546 கோடியைத் தொட்டது. நவம்பர் மாதத்தில் உற்பத்தி வரி வசூல் 6.5 சதவீதம் குறைந்த போதிலும் ஆண்டு இறுதியில் வசூல் அதிகரித்துள்ளது நல்ல அறிகுறி .

சேவை வரி வசூல் 48 சதவீதம் உயர்ந்து ரூ. 9,665 கோடியானது. சேவை வரி செலுத்துவதற்கான கால வரம்பு ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதும் வசூல் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

சுங்க வரி வசூல் 4 சதவீதம் உயர்ந்து ரூ. 12,608 கோடியானது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையான காலத்தில் சுங்க வரி வசூல் ரூ. 1,12,670 கோடியாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.