2011ம் ஆண்டு நவம்பரில்...தொழில் துறை உற்பத்தி 5.9 சதவீதம் வளர்ச்சி


கடந்த 2011ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் (ஐ.ஐ.பி), 5.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 6.4 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2004-05ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது.தற்காலிக புள்ளிவிவரத்தின்படி, தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண், கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், 5.1 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது. இது, மறு மதிப்பீட்டில், 4.74 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தயாரிப்பு துறை:கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இந்த வளர்ச்சி 6.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கீடு செய்வதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
நுகர் பொருட்கள்:நுகர் பொருட்கள் துறையின் உற்பத்தி, 13.1 சதவீதம் என்ற அளவில் மிகச் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 0.7 சதவீதம் என்ற அளவில் குறைவாக இருந்தது. மேலும், இதே காலத்தில், நுகர்வோர் சாதன துறையின் உற்பத்தி, 7.2 சதவீதத்திலிருந்து, 11.2 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மின் துறையின் உற்பத்தி, 14.6 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது.


இது, இதற்கு முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 4.6 சதவீதமாக இருந்தது.நுகர்வோர் சாதனங்கள் அல்லாத இதர துறையின் உற்பத்தி, 14.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்திருந்தது.சுரங்கத்துறை:பல்வேறு துறைகளின் உற்பத்தி மிகவும் அதிகரித்துள்ள நிலையில், சுரங்கம் மற்றும் பொறியியல் துறைகளின் உற்பத்தி எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளன. சென்ற 2010ம் ஆண்டு நவம்பரில், 6.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்ட சுரங்கத்துறையின் வளர்ச்சி, சென்ற 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 4.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.


இது தவிர, சென்ற நவம்பரில், பொறியியல் துறை உற்பத்தி, 4.6 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டு இதே மாதத்தில் இத்துறையின் உற்பத்தி, 25.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.அதேசமயம், கணக்கீட்டு மாதத்தில், அடிப்படை பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, 6.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது. இடைநிலைப் பொருட்கள் தயாரிப்பு துறையின் உற்பத்தி, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் (4.3 சதவீதம்), 0.2 சதவீதம் என்ற அளவில் சற்று உயர்ந்துள்ளது.


இது குறித்து மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறுகையில்," தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் 6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பது ஒரு நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறியாக உள்ளது. தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சுணக்க நிலை, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுடன் (அக்டோபர் -டிசம்பர்) முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது' என்று தெரிவித்தார்.


தற்போது தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி, இம்மாதம் நடைபெற உள்ள நிதிக் கொள்கை குறித்த அதன் ஆய்வு கூட்டத்தில், முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது என, பல பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமையும். சென்ற 2011ம் ஆண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஒன்பது காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான வளர்ச்சியாகும்.


பணவீக்கம்:நாட்டின் பொதுப் பணவீக்கம்,கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 9 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, சென்ற 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், இது வரையிலுமாக, முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை 13 முறை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளது.


இதனால், நிறுவனங்கள், விரிவாக்கம் மற்றும் புதிய முதலீடுகளுக்கு, வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளன. இது, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.