'சிலிக்கான் கிங்'-பதவி விலகல்




ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து புதன்கிழமை விலகினார் 'சிலிக்கான் கிங்' என வர்ணிக்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்.

உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமாக ஆப்பிளை மாற்றிய ஸ்டீவ் ஜாப்ஸ் பதவி விலகியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் கணையப் புற்றுநோய் காரணமாக அவர் இந்த கடினமான முடிவை மேற்கொண்டுள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒரு அமெரிக்க தம்பதியின் வளர்ப்பு மகன் ஸ்டீவ் ஜாப்ஸ். புத்த மதத்தைச் சேர்ந்தவர். கல்லூரிப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத அவர், எழுபதுகளின் பிற்பகுதியில் தனது நண்பர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

இவரது நிறுவனம் தயாரித்த ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ஆனால் ஆப்பிள் 2, கம்ப்யூட்டர் உலகில் இவரது நிறுவனத்துக்கான இடத்தை உறுதி செய்தது. 1980-ல் ஆப்பிளை பொது நிறுவனமாக மாற்றி பங்கு வெளியிட்டார். அது அவரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியது.

1985-ல் தான் ஆரம்பித்த நிறுவனத்திலிருந்தே விலகிக் கொண்டார் ஸ்டீவ். எல்லா பங்குகளையும் விற்ற அவர், ஆப்பிள் பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டார். வெளியில் போய் நெக்ஸ்ட் என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனம் பின்னர் ஆப்பிளுடன் இணைந்தபோது, ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிளுக்கு வந்தார், இடைக்கால தலைமை செயல் அலுவலராக.

பின்னர் 2000-ல் அவரே முழுமையான CEO என அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு ஸ்டீவ் ஜாப்ஸ் தொட்டதெல்லாம் தங்கம்தான். ஐபோன், ஐபேட், புதுப்புது மேக் கம்ப்யூட்டர்கள் என தொழில்நுட்பத் துறையில், எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது ஆப்பிள் நிறுவனம்.

பாரக் ஒபாமாவுடன் அமர்ந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு பெரும் விஐபியாகிவிட்டார் ஸ்டீவ்.

14 ஆண்டுகள் அவரது தலைமையில் ஆப்பிள் சாதித்தவை பிரமிக்கத்தக்க வெற்றிகள் என தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். அடுத்து ஆப்பிள் புதிய ஐபோன், அடுத்த தலைமுறைக்கான அட்வான்ஸ்டு ஐ பேட் போன்றவற்றை அறிமுகப்படுத்தவிருக்கும் நிலையில் ஸ்டீவ் விலகியுள்ளார்.

"நான் ஒரு நாள் இந்த நிறுவனத்தில் இல்லாமலே போகலாம். அதற்கான நாள் வரும்போது, நிறுவனம் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸ் அடிக்கடி கூறும் வாசகம். அது இப்போது நிகழ்ந்தே விட்டது.

இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத் தலைவராகவும், டிம் குக் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்கள் என்றும், ஸ்டீவ் தொடர்ந்து நிறுவனத்துக்கு வழிகாட்டுவார்; முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், ஆப்பிளின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் அச்சத்தைப் போக்கியதாகத் தெரியவில்லை. நேற்று ஸ்டீவ் ஜாப்ஸ் தனது விலகலை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.