சந்தை மந்திரமா?


பங்குச்சந்தையில் ஈடுபடும் முன் அறிந்துக் கொள்ளவேண்டியவை என முதலிட்டாளர்கள் பலவித இடுகைகளைக் கண்டிருப்பர்.சந்தையின் செயல்பாடுகள் மட்டுமின்றி பொறுமை, நிதானம், பொதுஅறிவு என சில தனிமனித அறிவுரைகளும் பொதுவாக வழங்கப்படுவதைக் காணலாம். வேறெந்த முதலிட்டிலும் அறிவுறுத்தப்படாத இந்த தனிமனிதக் கட்டுப்பாடு ஏன் பங்குச்சந்தையில் மட்டும் அறிவுறுத்தப்படுகிறது?? இது வெறும் அறிவுரையாக மட்டுமேயின்றி அவசியமாகவும் உள்ளது.. மற்ற முதலிடுகளிலிருந்து பங்குச்சந்தை எவ்வகையில் மாறுப்பட்டுள்ளதுஎன புரிந்துக் கொண்டால் நாமே நம்மை பங்குச்சந்தைக்கு ஏற்ப மாற்றிக்கொள்வோம் என்பது மட்டும் உண்மை ..

இந்த உலகில் பிறந்த யாவருமே வர்த்தகத்திற்கு புதிதானவர்கள் அல்லர்.. நம் அன்றாட வாழ்வில் நம்மை நாம் உணராமலேயே பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டுகொண்டுதான் உள்ளோம்; ஒரு குடும்பத்தலைவி காலையில் எழுந்து பால் வாங்குவதில் தொடங்கி, பேப்பர், பேனா, மளிகை சாமான், பஸ் பயணம், சினிமா, சுற்றுலா, சிற்றுண்டி .. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.. இதற்கான செலவுகள் பெரும்பாலும் நாம் முன்கூட்டி முடிவுசெய்தபடியே பங்கிடுகிறோம், மாதசம்பளம் வாங்கும் ஒருவர் அவரின் பால் செலவிலிருந்து சினிமா செலவு வரை பட்ஜெட் போட்டே செய்கிறார்.. எனவே வர்த்தகம் என்பதும், அதற்கான பண பரிமாற்றம் என்பதும் நாம் முன்னமே அறிந்த விஷயங்களேயன்றி முதலீடு செய்கையில் நாம் புதிதாக கற்கவேண்டிய விஷயங்கள் அல்ல ..

மேலும் சொல்லப்போனால், நாம் இந்த வர்த்தககங்களை எப்படி எளிமையாக செய்கின்றோமோ, அவ்வளவு எளிமையான செயல் தான் முதலீடு என்பதும் ( பங்குச்சந்தையும் சேர்த்தே); ப்படி சொல்வது சிலருக்கு வியப்பாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஏளனமாக இருக்கும்.. பார்ப்போம் இது சரியா என்று? மீண்டும் ஒருமுறை நீங்கள் அன்றாடம் செய்யும் செலவுகளை வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள்..
உதாரணமாக , திருமதி ரமேஷ் செய்யும் செலவுகளை பட்டியலிடுவோம்:-
பால், மளிகை, வீட்டு வாடகை, சினிமா, வெளியூர் பயணம், அழகு சாதனம் மற்றும் குளிர்சாதனப்பெட்டி - அவர் சென்ற மாதத்தில் மேலேக் கண்ட செலவுகளை செய்துள்ளார்.. இப்போது நாம் இதை வர்த்தகத்துடன் இணைத்துப்பார்ப்போம்..
அவரின் செலவுகளில் பால், மளிகை, வாடகை போன்ற தொடர்ச்சியான செலவுகளுக்கு அவர் அதிகம் மெனக்கெடுவதில்லை, இந்த செலவுகளைப் பற்றி அவர் நன்கு அறிந்துள்ளார்
அடுத்து அழகு சாதனம் வாங்கும் பொழுது அவர் எதையெல்லாம் கருத்தில் கொண்டிருப்பார் - பொருளின் தரம், பிராண்ட், விலை - இதற்காக அவர் வெவ்வேறு கடைகளில் அலைய போவதில்லை ஆனால் ஒரே கடையில் முடிந்தவரை அலசுகிறார்
இப்பொழுது அவர் குளிர்சதனபெட்டியை எப்படி வாங்கியிருப்பார்?? அழகு சாதனப்பொருட்கள் வாங்க செய்த அதே அடிப்படை, ஆனால் பல்வேறு கடைகளில் விலை விபரம், கியரண்டீ விபரம் பெற்று அலசுகிறார் .

திருமதி ரமேஷ், ஒரு மாதத்தில் பல்வேறு செலவுகளை கையாளுகிறார், ஒவ்வொரு செலவு வகைகளுக்கும் அவர் வெவ்வேறு வகையான யுக்திகளை செயல்படுத்துகிறார்..அவர் பால் வாங்குவதையும் அழகு சாதனம் வாங்குவதையும் ஒன்று போல் பார்க்கவில்லை, அழகு சாதனத்தையும், குளிர் சாதனத்தையும் வாங்க வித்தியாசம் காட்டுகிறார்.. இப்போது கூறுங்கள் திருமதி ரமேஷ் தன் செலவுகளை கையாண்ட யுக்திகளைத் தவிர வேறெந்த சிறப்பு யுக்தி நமக்கு பண முதலீட்டில் தேவைப்படுகிறது ?

நம் அன்றாட செலவுகளுக்கும், பண முதலீட்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், நாம் அன்றாட செலவு செய்யும்போது யுக்திகளை கையாளுகிறோம் என்று உணராமலேயே (அனிசை செயல் போல்) செய்து முடிக்கிறோம். சிறிதும் தயக்கமோ, தடுமாற்றமோ இன்றி தினமும் நாம் தொடர்ச்சியாக செய்கிறோம்.. ஆனால் பண முதலீடு செய்யும் பொழுது சிறந்த யுக்திகளுக்காக ஓடுகிறோம்.. இது மட்டுமே நான் காணும் செலவுகளுக்கும், முதலீட்டுக்கும் உள்ள வித்தியாசம் ..

மீண்டும் சொல்கிறேன் நம் அன்றாட செலவுகளை கையாளுவதைப் போலவே, முதலீடும் எளிமையான செயலே..
நான் இங்கு மீண்டும் என குறிப்பிட காரணமுண்டு... செலவும், முதலீடும் எவ்வளவு எளிமையோ .. அதேப் போல் அவற்றை புரிந்து கொள்வதும் அவசியமாகும்..

திருமதி ரமேஷ் அவர் செலவுகளை சிறிதும் தயக்கமோ, தடுமாற்றமோ இன்றி கையாளுகிறார். . எவ்வகையில் சாத்தியம்?
அவர் கையாளும் பொருட்களின் எதிர்கால மாறுபாடுகள் குறித்த எந்தவிதமான சிந்தனையோ குழப்பமோ அவருக்கு இருப்பதில்லை. . உதாரணமாக அழகு சாதனம் வாங்கியப் பிறகு, ஒருவேளை சில தினங்களில் அதன் விலை குறைந்துவிடுமோ, அப்படியே குறைந்துவிட்டாலும் அவர் அதை நஷ்டமாக பார்ப்பதில்லை. . எனவே தான் அவரால் தயக்கமோ தடுமாற்றமோ இன்றி கையாள முடிகிறது.. ஆனால் அந்த அழகு சாதன வர்த்தகத்தில் விலை குறைவு பற்றி அவர் வேண்டுமானால் கவலைபடாமல் இருப்பார்.. அவருக்கு விற்ற விற்பனையாளர் எவ்வாறு விலை ஏற்ற இறக்கத்தை எடுத்துக்கொள்வார்?
இங்குதான் நாம் விற்பனையாளருக்கும் , நுகர்வோருக்கும் வர்த்தகம் சம்பந்தமான வித்தியாசத்தை உணரவேண்டும் ..

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. நம் அன்றாட செலவுகளை கையாளுவதைப் போலவே, முதலீடும் எளிமையான செயலே.. ஆனால் .. ஆனால் ?????
ஒரு வர்த்தகம் என்பது இருவர் ஈடுபடும் செயல், வாங்குபவர் - விற்பவர்; நுகர்வோர் - விற்பனையாளர் (வர்த்தகர்) ; அன்றாட செலவுகளிலுமே இருவர் கூடி விளைவதே ஆகும்..
"அதேப் போல் அவற்றை புரிந்து கொள்வதும் அவசியமாகும்" - எதை புரிந்து கொள்தல்?
வர்த்தகத்தில் ஈடுபடும்போது நாம் எந்த நிலையில் நிற்கிறோம்.. நுகர்வோராகவா? வர்த்தகராகவா?
முதலீடு செய்யும் போது, குறிப்பாக பங்குச்சந்தை முதலீட்டில் நீங்கள் எந்த முகமூடி போட்டுக்கொண்டு இயங்குகிறீர்கள் என்பது மிக மிக மிக முக்கியமானது .. நுகர்வோராகவா ( ஒரு முறை முதலீடு ) வர்த்தககரகவா (தொடர் வர்த்தகம்)

இத அடிப்படை தெளிவு இல்லையெனில் .. சந்தையில் பணம் செய்வதற்கு நீங்கள் தகுதியான ஆள் இல்லை ..

தொடரும்..

Rajesh V Ravanappan