தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள்


கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது.

சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.

போஜோ நிறுவனமும் போனது

தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான போஜோ குஜராத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய ஆலையை நிர்மாணிப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க அந்த நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தன.

டாடாவின் நானோ கார் தொழிற்சாலை குஜராத்துக்கு சென்ற பின்னர் அம்மாநிலத்தை நோக்கி பிற கார் தயாரிப்பாளர்களும் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் விலை மிகக்குறைந்த கார் டாடா நானோ

இந்தியாவில் மலிவான டாடா நானோ கார்

கார் உற்பத்தி நிறுவனங்களின் முதல் தேர்வாக தமிழகம் ஏன் இல்லை என்ற கேள்விக்கு, இதற்கு மின் தட்டுப்பாடே முக்கிய காரணம் என்று பிக்கி என்ற இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தமிழகத்திற்கான தலைவர் ரஃபீக் அகமது கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே செயல்படும் ஹூண்டாய் தொழிற்சாலையில் கடந்த பல மாதங்களாக நிலவும் தொழிலாளர் பிரச்சனையும் நிலமையை சற்று பாதகமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரம் தமிழகத்தில் கார் உற்பத்திக்குத் தேவையான பல அம்சங்கள் சாதகமாக இருப்பதாகவும், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினாலேயே முதலீடுகள் தொடர்ந்து வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.