ஒரு லட்சம் ஏ.டி.எம்.,கள் நிறுவ வங்கிகள் திட்டம்


அடுத்த நான்கு ஆண்டுகளில், ஒரு லட்சம், ஏ.டி.எம்.,களை அமைக்க, வங்கிகள் திட்டமிட்டு உள்ளன. தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களை, வங்கிகள் அறிமுகப்படுத்தின. இந்த வகையில், முதன் முதலாக, எச்.எஸ்.பி.சி., வங்கி மும்பையில், தானியங்கி பணம் வழங்கும் (ஏ.டி.எம்.,) இயந்திரத்தை, 1988ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து, ஏ.டி.எம்.,களை பெருமளவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் வரையில், 99 ஆயிரத்து 218 ஏ.டி.எம்.,கள் அமைக்கப்பட்டு உள்ளன.கடந்த, 2016ம் ஆண்டுக்குள் ஏ.டி.எம்.,கள் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தொடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.புதிதாக அமைக்கப்படும் ஏ.டி.எம்.,களுக்கு, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரை, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

"இந்திய ஏ.டி.எம்., தொழிலும்; அடுத்த கட்டத்திற்கான வளர்ச்சியும்' என்ற தலைப்பில், ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்திய மக்கள் தொகையில், பெரும்பகுதியான மக்கள், வங்கி வசதி இல்லாத இடங்கள், மற்றும் குறைவான வங்கிகள் உள்ள இடங்களில்தான் வசிக்கின்றனர். வங்கிகள் பெரும்பாலும், நகர்ப்புறங்களில் தான், கிளைகளை அமைப்பதில், முக்கியத்துவம் காட்டுகின்றன. எனவே, வங்கிகள் இல்லாத இடங்களில், ஏ.டி.எம்., வசதிக்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்தது.வங்கிகள், அடுத்த நான்கு ஆண்டுகளில், கிராமப் புறங்களிலும், நடுத்தர நகரங்களிலும், ஏ.டி.எம்.,களை விரிவுபடுத்த வேண்டும் என, இந்த ஆய்வில், வலியுறுத்தப்பட்டு உள்ளது.