ஆப்பிள் கணினியை கண்டு பிடித்த ஸ்டீவ் ஜாப்ஸ்(Steve Jobs) வாழ்க்கை ஒவ்வொரு மனிதரும் அறிந்திருக்க வேண்டிய கதையாகும். நம்பியவர்கள் ஏமாற்றுவதும், நயவஞ்சகர்கள் கூடிச் சதி செய்வதுமான உலகில் எதற்கும் கலங்காது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட இந்தத் தொழில் மேதையின் வாழ்வு, ஒவ்வொரு மனிதருக்கும் மிக அவசியமானதாகும்.

பரம ஏழையாகப் பிறந்த இவரை வளர்க்க முடியாத நிலையில் தாய் இன்னொருவருக்கு தத்துக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது அந்தத் தாய் பணத்தைக் கேட்கவில்லை, தன்னுடைய மகனை பல்கலைக்கழகத்தில் படிக்கவைத்து பட்டமும் பெற யார் உதவுவார்களோ அவர்களுக்கே தனது பிள்ளையை தத்தாக தருவேன் என்று தெரிவித்தார்.
அதற்கு உடன்பட்டு அவரை தத்தெடுத்த வளர்ப்புப் பெற்றோரும் பல்கலைக்கழகம் வரை அவரை படிப்பிக்க வைத்தார்கள். அதற்கு அப்பால் அவர்களால் முடியாமல் போனது. அதை அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் தானாக படிப்பை நிறுத்தினார். பட்டினியை தீர்க்க தினமும் ஏழு மைல் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஹரே கிருஷ்ணா மடத்தில் ஒரு வேளை உணவு சாப்பிட்டு தனது பசியைப் போக்கினார். நண்பர்களின் அறையில் தங்கி வெற்றுப் போத்தல்களை பொறுக்கி விற்று, படிப்பைத் தொடர்ந்தார். நீ வாழும் ஒவ்வொரு நாளையும் இன்றுதான் உனது வாழ்வின் கடைசிநாள் என்று நினைத்து வாழ் என்று எண்ணி வாழ்ந்தார். இதுதான் அவர் வாழ்வின் ஆதாரசுருதியாகும்.
பாதி நாட்கள் பட்டினி கிடந்தாலும் கூட, அவர் மனதில் எரிந்த அக்கினி ஓய்ந்துவிடவில்லை. கலிகிராபி என்ற கணினி எழுத்து வடிமைப்பை கண்டு பிடிக்க அல்லும் பகலும் போராடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களாக போராடி மக்கின்ரொஸ் கம்ப்யூட்டரை வடிவமைத்தார். இவருடைய முறையை பின்பற்றி உருவாக்கப்பட்டதுதான் பின்னாளில் வந்த மக்கிரோ சொப்ரின் விண்டோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டு பிடிப்பு கைக்கு எட்டியதும் தனது 20 வது வயதில் நண்பரான லாஸ் என்பவருடன் இணைந்து சிறிய பட்டறையாக ஆரம்பித்தஆப்பிள் கணினித் தொழிற்சாலை 10 வருடங்களில் நாலாயிரம் தொழிலாளரைக் கொண்ட இரண்டு மில்லியான் டாலர் பெறுமதியான பாரிய தொழிற்சாலையாக உருப்பெற்றது.

தனது 20 வது வயதில் ஆரம்பித்த நிறுவனம் 30 வது வயதில் பறிபோக மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். மற்றவர்களாக இருந்தால் அடியோடு உடைந்தே போயிருப்பார்கள். இரவு பகலாக பாடுபட்டு உருவாக்கிய நிறுவனத்தை கைப்பற்றிய நயவஞ்சக நண்பர்களையும், அவர்களுடைய இழி செயலையும் அவர் நினைத்து கவலைப்படவில்லை.

பின்நாளில் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அது கசப்பான நிகழ்வாக இருந்தாலும் அனிமேஷனை உருவாக்கும் இடத்திற்கு தான் வளர அதுவே உதவியது என்று கூறி அமைதி கண்டார்.
இதற்குப் பிறகு அவருக்கு கணையத்தில் புற்று நோய் வந்தது. வாழும் ஒவ்வொரு நாளும் கடைசிநாளே என்று வாழ்ந்த அவர் மனவுறுதி தளர்ந்துவிடவில்லை, புற்று நோய்க்கும் பயந்துவிடவில்லை, தொடர்ந்து, உழைத்தார்.
அவரின் மன உறுதிக்கு முன்னால் நிற்க முடியாது புற்று நோயும் மண்டியிட்டு ஓடியது. ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அவரைப் பிடித்த புற்று நோயும் விலகிப் போனது. மீண்டும் யாரும் நம்ப முடியாதபடி எழுந்து நின்றார். தன்னை நெருங்கிய எல்லாச் சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வில் அரிய சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது பின்வருமாறு கூறினார்.
- இனியவர்களே உங்கள் வாழ்க்கை குறுகியது, அதை நினைனவிற் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. எனவே நீங்கள் அடுத்தவர் வாழ்க்கையை வாழ்ந்தும், அடுத்தவர் சிந்தனையை சிந்தித்தும் வீணாக்கிவிடாதீர்கள். பிறர் கருத்துக்களின் பேராசையில் உங்கள் உள்ளத்து உணர்வுகள் கூறும் வார்த்தைகளை கவனமாகக் கேட்க மறந்துவிடாதீர்கள். உங்கள் இதயமும், உள்ளுணர்வும் கூறுகிறபடி கேட்டு வாழுங்கள். சாதிக்கும் தாகத்தோடு இருங்கள், அறிவுப் பசியோடு இருங்கள் ! – என்றார்.
பொதுவாக அறிவுரை பலரிடமிருந்தும் கிடைக்கலாம். ஆனால் சாதித்தவர்களின் அறிவுரைகள் விலைமதிப்பற்றவையாகும். அவற்றைப் பின்பற்றினால் அடைய முடியாத சிகரங்கள் இல்லவே இல்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய அற்புத மனிதர்.
1 comments:
இவர்கள் உலகை வடிவமைப்பவர்கள்...
பகிர்வுக்கு நன்றி...
Post a Comment