அமெரிக்காவும், யூரோ நாணயத்தைப் பயன்படுத்தும் ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சிக்குள் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப். எச்சரித்துள்ளது.
அப்படியொரு பொருளாதார வீழ்ச்சி வருமானால் மற்ற நாடுகளும் அதனால் கணிசமான பாதிப்புகள் ஏற்படும் என்று அது கூறியுள்ளது.

உலக பொருளாதாரம் ஆபத்தானதொரு புதிய கட்டத்துக்குள் நுழைந்துள்ளது என்று ஐ.எம்.எஃப்.வெளியிட்டுள்ள புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த நடவடிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
வட்டி விகிதங்களைக் குறைக்க ஐரோப்பிய மத்திய வங்கி தயாராக வேண்டும் என அது தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் அவசர அவசரமாக நிதிக் குறைப்புகளை செய்யப்போய் அதனால் பொருளாதார நிலை மேலும் பலவீனமடைவதற்கான ஆபத்து இருக்கவே செய்வதாக ஐ.எம்.எஃப். அறிக்கை கூறுகிறது.