தங்கத்திற்கு வரி?

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினரிடையே தங்கத்தில் முதலீடு செய்வதே பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால் தங்கத்தில் தான் மிக அதிகமான பணம் முதலீடு செய்யப்படுகிறது. ஆனால், முடக்கப்படும் இந்த முதலீட்டால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதால் தங்கத்தில் மக்கள் அதிக அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தான் கடந்த பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான வரியைக் கூட மத்திய அரசு உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதை வாங்குவது குறையவில்லை. இந் நிலையில் இப்போது தங்கம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இறக்குமதியை பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 நிருபர்களிடம் பேசிய அவர், தங்கத்தின் தேவை மிதமானதாக இருக்க வேண்டும். எனவே, தங்கம் இறக்குமதிக்கான செலவை அதிகரிக்கச் செய்வதை விட வேறு வழி இல்லை. இந்த யோசனை அரசின் பரிசீலனையில் இருக்கிறது. இறக்குமதி அதிகரிப்பால் நிதிப் பற்றாக்குறையின் அளவும் அதிகரிக்கிறது. தங்கம் அதிகமாக இறக்குமதி செய்தது மற்றும் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணை விலை உயர்வு போன்ற காரணங்களால், 2011-12ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.2 சதவீதமாக அதிகரித்து விட்டது. எனவே, தங்கத்தின் இறக்குமதியை பெருமளவில் குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இறக்குமதிக்கான வரியும் உயர்த்தப்படலாம். எனவே, பொதுமக்கள் தங்கத்தின் பயன்பாட்டை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


இறக்குமதி குறைந்தால் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகமாகும். இதனால் விலை தாறுமாறாக உயரவும் வாய்ப்புண்டு. 2011-2012ம் ஆண்டில் ரூ. 33,000 கோடியளவுக்கு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.