பரம ரகசியம் 3

சேர மன்னனின் ஆணைக்கிணங்க அந்த காலத்தில் வரி செலுத்துவதில் ஒரு வித்தியாசமான நடைமுறை மக்களிடையே செயல் படுத்தப்பட்டது. அதாவது வரியை பணமாக மட்டுமல்லாமல், தாங்கள் ஈட்டும் பொருள்களாகவும் மக்கள் வரியை செலுத்தி வந்தனர். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் கால்நடை வளர்ப்பு தொழில் செய்யும் விவசாயிகள், குறிப்பிட்ட அளவு பாலை தினமும் அரசுக்கு கொடுப்பதன் மூலம் தங்கள் வரியை செலுத்தி வந்தனர்.

அவ்வாறே சேர நாட்டில் வாழ்ந்து வந்த சிறு விவசாயி சிதம்பரமும் தன் கடமையை செவ்வனே ஆற்றி வந்தார்.

பாலை அரசு கிடங்கில் சமர்ப்பிக்க அதிகாலை சூரிய உதயத்திற்கு முன், மக்கள் சதுக்கத்தில் ஒன்று கூடி, வரிசையில் நின்று பெரிய அளவிலான பானையில் ஊற்றுவது வழக்கம். சிறு அளவிலேயே விவசாயம் செய்தாலும் நம் சிதம்பரம் மிக மூளைகாரர். தன் தொழிலை பெருக்குவது பற்றிய சிந்தனையிலேயே கன பொழுதும் நகரும் அவருக்கு. தன் கண்களையும், காதுகளையும் கூர்மையாக திறந்தே வைத்திருப்பார்.

அதிகாலை நேரம், நீண்ட வரிசை, சர சரவென நகரும் மக்கள், அரைகுறை தூக்கத்தில் காவலாளிகள் - தினம் தினம் ஒரே நிகழ்ச்சி. சற்றும் மாறாத இந்த இந்த முறையில் , பொதியை சுமக்கும் மாடுகள் போல பழக்கப்பட்டிருந்தனர் அக்கால மக்கள். சற்று சலித்தே போயிருந்தார் நம் சிதம்பரம். ஆனாலும் அவர் கூரிய சிந்தனையில் சிறு பொறியொன்று தட்டியது.

"தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் பால் ஊற்றுகின்றனர், அதுவும் ஒரே பானையில்?? விடியலை கண்டிராத காலை நேரம்.. எப்போதுதான் வரிசை முடியுமோ என அவசரகதியில் காத்திருக்கும் மக்கள்" , பக்கத்தில் இருப்பவரை கூட பெரிதாக சட்டை செய்யாத இந்த  சூழல் நம் சிதம்பரம் மனதில் கேள்வி ஒன்றை எழுப்பியது.. " எல்லோரும் ஒரே பானையில் தான் பால் ஊற்றுகின்றனர், சம அளவு குடுவையே அனைவரும் ஊற்றுகின்றனர் என்றாலும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது??? அவ்வளவு பெரிய பானையில் சிறு குடுவை தண்ணீர் என்ன பெரிய வித்தியாசம் காட்டப்போகிறது ???" இப்படி சிந்தித்த சிதம்பரம் ஒருநாள் அதை பரிசோதித்தும் பார்த்துவிட்டார்.

மிகவும் சாதுர்யமாக, மற்றவர் கண்ணில் மண்ணை தூவி ஒரு மாயாவி போல கன நேர பொழுதில் பாலுக்கு பதில் தண்ணீர் நிரம்பிய குடுவையை,மற்றவர் பார்க்கும் போதே பால் என நம்பும் வண்ணம் கடகடவென செயல் படுத்தினார் சிதம்பரம். அவர் நினைத்தது போலவே நடந்தது .. யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. சில நாட்கள் தயக்கத்துக்கு பின், இதனையே தன் பழக்கமாக கொண்டார்.



வரியை சுமையாக கருதி செலுத்தி வந்த மக்களுக்கு, சிதம்பரத்தின் திடீர் சுறுசுறுப்பு ஆச்சிரியத்தை அளித்தாலும் அவரின் கண்கட்டி வித்தையை யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் தினமும் சிதம்பரத்தின் முன்னோ அல்லது பின்னோ வரிசையில் நிற்கும் பரமன்  இதனை மோப்பம் பிடித்துவிட்டார். விடுவாரா அவர்.. மறுநாள் முதல் அவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்ற ஆரம்பித்தார்.. அவருக்கும் சந்தோஷம்.. ஊரே பால் ஊற்ற தாம் மட்டும் தண்ணீர் ஊற்றி தப்பிப்பதில் தீராத சந்தோஷம். ஆனாலும் பரமன் சிதம்பரத்திடம் காட்டிக்கொள்ளவில்லை தாமும் அவரைப் போலவே என்று.


சிறுது சிறிதாக மற்றவர்களிடமும் பரவ ஆரம்பித்தது இந்த தண்ணீர் வித்தை. சிதம்பரத்திடம் இருந்து பரமன் , இப்போது தங்கம், ஜெயம், கார்த்திகேயன், அழகர் என்று வித்தை கற்றவர் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றது.வித்தை அறிந்தவர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது; யார் பால் ஊற்றுகிறார்கள் யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என அறியாமலேயே தாங்கள் மட்டுமே புத்திசாலி என எண்ணிக்கொண்டு அதிகரித்துக்கொண்டே இருந்தது இவர்களின் எண்ணிக்கை.

ஒரு சுபதினம்!!! மன்னர் வருகை தந்திருந்தார் அன்று ..!!! ஊர் மக்கள் அனைவரும் பால் ஊற்றி முடித்தப்பின்னர், மன்னர் முன்னிலையில் பானையை திறந்தனர் காவலாளிகள்!!! அதிர்ந்தே போனார் மன்னர் !!! பின்னர் சும்மாவா ??? பானையில் இருந்தது தெள்ள தெளிந்த தண்ணீர் மட்டுமே ..

தாங்கள் மட்டுமே தண்ணீர் ஊற்றுகிறோம் என எண்ணியே அனைவரும் மாட்டிகொண்டனர் அன்று. கடுமையான தண்டனை அளித்து சொத்துக்களையும் பிடுங்கிகொன்டார் மன்னர்.

நம் கடந்த இரண்டு பதிவுகளின் விவாத பொருளே இந்த கதையின் மையம்.. வித்தை ஏன் பரம ரகசியமாக வைக்கப்பட வேண்டும்???? ஊரே பால் ஊற்றும் போது தண்ணீர் ஊற்றி தப்பிப்பது வித்தையே என்றாலும் .. எல்லோராலும் செய்ய முயலும்போது வினையே மிஞ்சும்.

SHARE MARKET லும் FUNDAMENTAL ANALYSIS பார்த்து COMPANY P / L , EPS , PE RATIO மற்றும் பல விஷயங்களை அங்குலம் அங்குலமாக தமது 5 அல்லது 6 வருட படிப்பின் அடிப்படையில் ஒரு CA அல்லது FUND MANAGER எடுக்கும் LONG TERM INVESTMENT டே பங்குசந்தையின் அடிப்படை ஆதாரமாகும்.
20 % MARGIN பணம் மட்டும் செலுத்தி FUTURE TRADE மூலம் குறிப்பாக INTRA DAY யில் லாபம் சம்பாதிக்கும் கலை,  எல்லோரும் பால் ஊற்றும்போது நாம் மட்டும்  தண்ணீர் ஊற்றும் சாதுர்யத்தை உள்ளடிக்கியது. 

INTRADAY என்பது லாபம் ஈட்டுவதற்கான சிறந்த தளம் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் இங்கு நாம் எப்படிப்பட்ட தெளிவுடன் இருக்க வேண்டும் என்பதே மிக முக்கியம்.

INTRADAY இல் எவ்வாறான அணுகுமுறையை கையாளுவது என்பதை அடுத்த இறுதி பதிவில் காண்போம்.