சாதனையாளர்

வெறும் 50 பைசாவில் வாழ்க்கையைத் தொடங்கியவரின் இன்றைய ஒரு நாள் வருமானம் ரூ.2 லட்சமாம். இவர் பெரிய தொழிலதிபரின் மகளும் அல்ல, மனைவியும் அல்ல.

சென்னை மெரினா கடற்கரையில் 50 பைசாவுக்கு காபி, விற்றவர் இன்று பல ஹோட்டல்களுக்கு முதலாளி. இந்திய தொழில் வர்த்தக சபை (ஃபிக்கி)யின் கடந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதைச் தட்டிச் சென்றவர் பெட்ரிஷியா.

காலத்தின் கட்டாயம் இவரை தொழிலதிபராக மாற்றியது என்று கூடச் சொல்லலாம். தன் திருமண வாழ்க்கைதான் இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

வேளச்சேரியில் வசித்து வரும் அவருடனான சந்திப்பிலிருந்து...

உங்களது ஆரம்பம் எது?

கட்டுப்பாடான கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த நான் வேற்று மதத்தவரை திருமணம் செய்து கொண்டேன். கணவர் போதைக்கு அடிமையானதால், எனது வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. அவரைத் திருத்துவதற்கு முயன்றும் முடியாமல் போனது.

என் இரண்டு சிறிய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனியாக தொழில் தொடங்க முன்வந்தேன். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு கணவர் வெளியேற, எனது வீட்டில் என் பெற்றோருடன் நானும் எனது குழந்தைகளும் வாழ்ந்து வந்தோம்.

தொழில் தொடங்க முடிவெடுத்தது எப்போது?

நான் சமையல் கலையில் ஏற்கெனவே டிப்ளமோ பெற்றிருந்தேன். சமையலில் புதிது புதிதாக எதையாவது புகுத்திக் கொண்டே இருப்பேன். முதன் முதலாக சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலையின் அருகே ஒரு ஸ்டால் வைத்தேன்.

முதல் நாளில் வெறும் 50 பைசாவுக்கு ஒரு காபி மட்டுமே விற்றது. விற்பனை ஆகவில்லையே என்பதைவிட நான் சமைத்த வகைகளை யாரும் சாப்பிடவில்லையே என்பதுதான் மிகவும் வருத்தமாக இருந்தது.

50 பைசா கிடைத்ததே கடவுளின் கருணைதான் என்று என் அம்மாதான் ஆறுதல் கூறினார். அடுத்த நாள் நான் எதிர்பார்த்ததை விட அதிக விற்பனையானது. அதிலிருந்து எனக்கு ஏறுமுகம்தான். திரும்பிப் பார்க்கக் கூட நேரம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தேன்.

வெற்றி கண்ட உங்களின் அடுத்த படி எதுவாக இருந்தது?

என்னிடம் இருந்த உணவு வகைகளின் தரம் அனைவரையும் கவர்ந்தது. கடற்கரையின் அருகில் இருந்த குடிசைப் பகுதி மாற்று வாரியத்தில் கேன்டீன் தொடங்கினேன். அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களில் கேன்டீன் தொடங்கினேன்.

அதனைத் தொடர்ந்து, ஹோட்டல் தொடங்க முன்வந்து, தனியாக இல்லாமல் மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து தொடங்கினேன். அதன் பின்பு தனியாக தொடங்கினேன். இன்று சுமார் 12 உணவகங்கள் சென்னையில் உள்ளன.

உங்களின் சாதனைப் பயணத்தில் என்னென்ன சவால்களைச் சந்தித்தீர்கள்?

பொருளாதார ரீதியான பிரச்னைகள் இருந்து வந்தது. அந்த சமயத்தில் எனது அம்மாவிடம் சிறு சிறு கடன் பெற்று சமாளித்துவிடுவேன். அதனை சிறிது சிறிதாக அடைத்தும்விடுவேன். பெற்றோரை கஷ்டப்படுத்தி திருமணம் செய்து கொண்டதால், அவர்களை மறுபடியும் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து.

இளவயதில் இந்தத் தொழிலுக்கு வந்ததால், சமூக விரோதிகளின் கேலி, கிண்டல், தவறான பார்வை போன்றவற்றுக்கு ஆளாகியுள்ளேன். கண் அசைத்தால் கூட அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள். மன தைரியத்தால் மட்டுமே அவர்களை வெற்றி கொண்டேன். மனதில் உறுதி இருந்தால் எந்தப் பிரச்னையையும் சமாளித்து விடலாம்.

எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் என் வாழ்க்கைப் பயணத்தில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

24 மணி நேரமும் உழைத்ததால், குழந்தைகளை எவ்வாறு பராமரித்தீர்கள்?

எனது பெற்றோர், தங்கை, தம்பி ஆகியோரின் உதவியால்தான் என் தொழிலில் எனக்கு வெற்றி கிடைத்தது. என் திருமணத்தினால் அவர்களுக்கு நான் கஷ்டத்தைக் கொடுத்த போதிலும், எனக்காக இன்றளவும் உதவி வருகிறார்கள். என் மகன் இங்கிலாந்தில் கடல்சார் பொறியியல் படித்துவிட்டு, இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளதால், இதில் இறங்கிவிட்டான். என் மகளின் மரணம்தான் என்னை நிலைகுலையச் செய்துவிட்டது.

என்ன நேர்ந்தது?

திருமணமான ஒரே மாதத்தில் விபத்தில் மகளும், மருமகனும் இறந்து விட்டனர். விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் இறந்தவர்களை இதில் ஏற்றமாட்டோம் என்று கூறிச் சென்றுவிட்டது. இறந்து விட்டார்கள் எனத் தீர்மானிக்க ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரால் முடியுமா? ஒரு வேளை அவர்கள் பிழைத்திருந்தால்..

இந்த சம்பவத்தால் என்னுடைய தொழிலில் இருந்து சுமார் 3 ஆண்டுகள் முழுவதுமாக விலகி விட்டேன். கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மகன்தான் வேலையை விட்டுவிட்டு என் தொழிலை கையில் எடுத்துக் கொண்டான். கடந்த ஆண்டில் இருந்துதான் முழுவதுமாக மறுபடியும் இதில் ஈடுபட்டுள்ளேன்.

என் மகளுக்கு விபத்து நடந்த இடத்தில், ஒரு இலவச ஆம்புலன்ஸ் சேவையை ஏற்படுத்தியுள்ளேன். அந்த இடத்தில் நடக்கும் விபத்துகளுக்கு எந்தவித கட்டுபாடுகளும் இன்றி உதவ வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளேன். வேறு சில இடங்களிலும் இதே போன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்காலத் திட்டமும் உள்ளது என்றார் அவர்.

சிறிய பிரச்னைகளுக்கே துவண்டு போய் எதிர்காலம் குறித்த பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் மத்தியில், தனி ஒரு ஆளாக நின்று இன்று வானளாவ உயர்ந்துள்ளவரின் உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

நன்றி : தினமணி