அனலிஸ்ட்களுக்கு புதிய விதிமுறை: செபி



பங்குச்சந்தை வர்த்தகத்தில் அனலிஸ்ட்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் கொடுக்கும் அறிக்கை சாதகமாக இருக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும். ஒரு வேளை பாதகமான அறிக்கை வரும் பட்சத்தில் பங்குகளின் விலை சரியும் அபாயமும் இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறையினை செபி வெளியிட்டிருக்கிறது.

இதன்படி வெளிநாட்டு புரோக்கிங் நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை பற்றி கருத்து கூறுவதற்கு புதிய விதிமுறைகளை கொண்டுவரப்போகிறது செபி. வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனம் இந்தியாவில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கூற முடியாது.

ஒருவேளை கருத்து கூற வேண்டும் என்றால் இந்தியாவில் ஓர் துணை நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் மூலம் விண்ணப்பித்த பிறகு தான் பங்குச்சந்தை கணிப்புகளைக் கூற முடியும்.

வெளிநாட்டு புரோக்கரேஜ் நிறுவனங்கள் இது போல சில அறிக்கைகளை வெளியிட்டு அதன்மூலம் பங்குகளின் விலை சரிந்ததால் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

கனடாவை சேர்ந்த வெரிட்டாஸ் நிறுவனம் டி.எல்.எஃப்., ரிலையன்ஸ், இந்தியாபுல்ஸ் ஆகிய நிறுவனங்களை பற்றி கூறிய கருத்துகள், அந்த பங்குகளின் விலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தின. இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

மேலும் சர்வதேச பங்குச்சந்தை அமைப்பும் (ஐ.ஓ.எஸ்.சி.ஓ) பங்குச்சந்தை அனலிஸ்களுக்கு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று செபியிடம் பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செபி இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

புதிய வழிகாட்டு நெறிமுறையின் படி, முறையான சான்றிதழ் இல்லாமல் ஒருவரும் பங்குச்சந்தை அனலிஸ்டாக இருக்க முடியாது. அதே சமயத்தில் அனலிஸ்ட்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குலைக்கும் வகையிலோ, அல்லது அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்காக கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.



மேலும் அனலிஸ்ட்கள் தங்களது முதலீடுகளை, நேரடி மற்றும் மறைமுக வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை வெளியே சொல்ல வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறது.

மேலும் ஒர் அனலிஸ்ட் தான் பரிந்துரை செய்த அல்லது நிறுவனம் பரிந்துரை செய்த பங்குகளில் 30 நாள்களுக்கு முன்பாகவோ அல்லது பரிந்துரை வெளியான 5 நாட்களுக்கு உள்ளாகவோ அந்த பங்கில் எந்தவிதமான பரிவர்த்தனை செய்யவும் அனுமதி இல்லை. 

0 comments: