நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?
"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.
அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "snl bearings" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?
சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் . இது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான்.
0 comments:
Post a Comment