சரிவிலிருந்து மீளுமா மைக்ரோசாப்ட் ?விண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான WINDOWS-8  மைக்ரொஸாஃப்ட்  வெளியிட்டு  உள்ளது .

முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் மைக்ரோஸாஃப்ட் வெளியிட்டு  உள்ளது. இதற்கு  SURFACE  என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.
நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில் கோலோச்ச முடியவில்லை.
ஆப்பிள், கூகுள் ஆண்ட்ராய்டு போன்றவற்றுடன் போட்டிபோட விண்டோஸ் திணறிவருகிறது.
மைக்ரோஸாஃப்டின் சறுக்கலை தடுக்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.

தொடுதிரைக் கணினிகள்


நவீன கைத்தொலைபேசிகளும் டேப்லட் கணினிகளிலும் தொடுதிரை என்பது எப்படி பிரபலமாகிவிட்டதோ அதேபோல மேஜையில் வைத்து வெலைபார்க்கும் கணினிகள் மடிக் கணினிகள் ஆகியவற்றிலும் தொடுதிரை பிரபலம் அடையும் என்று நம்பி மைக்ரோஸாஃப்ட் இந்த பரீட்சையில் இறங்கியுள்ளது.
தொடுதிரை அம்சத்தோடு வரக்கூடிய புதிய தலைமுறைக் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் 8 ஆகும்.
ஆனால் எப்போதும்போல கீபோர்ட் மவுஸ் பயன்படுத்தியும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
தவிர டேப்லட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற சிறிய கணினிகளிலும் இவற்றைப் பயன்படுத்திவிட முடியும்.

வடிவமைப்பில் மாற்றங்கள்

விண்டோஸ் மென்பொருளின் தோற்றத்தில் இம்முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விண்டோஸின் முந்தைய வடிவங்கள் அனைத்திலும் காணப்பட்ட ஸ்டார்ட் பொத்தான் விண்டோஸ் 8ல் கிடையாது.
மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மென்பொருள் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
தனி நபர் கணினி என்று வரும்போது சந்தையில் மிகப் பெரிய பங்கை மைக்ரோஸாப்ட் வைத்திருக்கிறது.

சரிவில் மைக்ரொஸாஃப்ட்

ஆனால் அவ்வகைக் கணினிகளை மக்கள் பயன்படுத்துவதென்பது மிக வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஏனென்றால் இன்றைக்கு கணினியில் செய்யும் அத்தனை வேலையையும் கைத்தொலைபேசியில் செய்துவிடலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஐபேட், கூகுளின் அண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கும் ஏராளமான கைத்தொலைபேசிகள், டேப்லட்கள் போன்றவைதான் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கணினி இயக்க மென்பொருளில் 70 சதவீதமாக இருந்த மைக்ரோஸாப்டின் சந்தைப் பங்கு நான்கே வருடங்களில் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய விண்டோஸ் வந்து அந்தச் சரிவை சரிகட்டிவிடும் என்று மைக்ரோஸாஃப்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் கூறுகிறார்.

விஷப் பரீட்சை?

மைக்ரோஸாஃப் இறங்கியுள்ள இந்தப் பரீட்சையில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. கணினிகள், லேப்டாப்புகள் போன்றவற்றில் தொடுதிரை இருப்பதை நுகர்வோர் விரும்பாமல் போகவும் வாய்ப்பு உண்டு.
மேலும் முந்தைய விண்டோஸ் வடிவங்களுக்கு பெருமளவில் மாறுபட்டதாக வந்திருக்கின்ற இந்த வடிவத்தைக் கண்டு, பலகாலமாக விண்டோஸ் பயன்படுத்திவருபவர்கள் குழம்பிப்போய் விண்டோஸிலிருந்து விலகிச் செல்லக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது.0 comments: