இந்தியா: வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு


இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இருபது வருடங்களில் இரு மடங்காகியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்த விசயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 வீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 வீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்றும் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கூறியுள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. அதாவது 121 கோடி இந்திய மக்களில் 42 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாவிற்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கிறார்கள்.

பிரஸில், இந்தோனேசியா மற்றும் சில குறியீடுகளின் அடிப்படையில், ஆர்ஜண்டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக, இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு மாறாக சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வருமான வேறுபாடு அதிகரித்துள்ளது.

வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா சரியாக செயற்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

37 வீதமான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக இந்திய அதிகாரபூர்வ அறிக்கை கூறுகின்ற போதிலும், 42 வீதமான இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாரிஸை தளமாகக் கொண்ட இந்த அமைப்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற 34 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கிராமங்களில் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான தனிச்செலவுகளை சமாளிப்பதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 26 ரூபாய் வருமானமே போதுமானதாகும் என்று அண்மையில் கூறியதற்காக இந்திய அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நகரங்களைப் பொறுத்தவரை இந்தச் செலவுகளுக்கு 32 ரூபாய் போதுமானது என்றும் இந்தியா கூறியிருந்தது.

வறியவர்களை வரையறுப்பதற்கான வருமான மட்டம் மிகவும் குறைவாக அங்கு இருப்பதாகவும், வறிய மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பதற்காக வேண்டுமென்றே இந்த மட்டம் குறைத்துக் காண்பிக்கப்படுவதாக பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று மே மாதத்தில் கூறியிருந்தது.

ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் உதவித் திட்டங்கள்கூட சரியான பலனைத் தரவில்லை.

0 comments: