'ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது


இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.

இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.


இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.

1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.

அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.

சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.

நவீன வடிவங்கள்

அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.

சர்ச்சைகள்

'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.

இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.

தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.

இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.

0 comments: