சீன பொருளாதாரம் படிப்படியாக சரியும்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, இன்னும், 15 ஆண்டுகளில் தற்போதைய, 8 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாகக் குறைந்து விடும் என்பதால், தேவையான கட்டமைப்பு மாற்றங்களை, அந்த நாடு மேற்கொள்ள வேண்டும் என, உலக வங்கி கூறியுள்ளது. உலக வங்கியின் அறிவுரையை ஏற்பதாக சீனாவும் தெரிவித்துள்ளது.

கடந்த, 2011 வரை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 9.2 சதவீதமாக உள்ளது. இந்தாண்டின் துவக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்த உலக வங்கி, இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சி, 8.4 சதவீதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது.

இந்நிலையில், சீன அமைச்சகங்களுடன் கலந்து ஆலோசித்து, சமீபத்திய பொருளாதார வளர்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டு, உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த, 30 ஆண்டுகளாக சீன பொருளாதார வளர்ச்சியின் ஆண்டு சராசரி, 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. கடந்த 2011ல், 8.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2026 - 2030க்குள் 5 சதவீதம் என்ற அளவிற்கு குறையும்.

இந்த வீழ்ச்சி விகிதத்தை தாமதப்படுத்துவது தான் சீனாவின் மிகப் பெரிய சவால். இதற்காக தற்போதைய பொருளாதார கொள்கைகளில் இருந்து மாறி, விரைவில் புதிய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசு நிறுவனங்களை விலக்கிவிட்டு, தனியார் மயமாக்கலுக்குத் தயாராக வேண்டும். சந்தை அடிப்படையிலான பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.

வங்கிகளை வர்த்தகமயமாக்கல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், நில வருவாயில் உள்ளூர் அரசுகளைச் சார்ந்திருத்தலைக் குறைத்தல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்டவற்றை சீனா மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் தான் சீன சமூகத்தை நிலையாக வைத்திருக்க உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

0 comments: