சீர்திருத்த நடவடிக்கைகளால் அன்னிய நிறுவனங்கள் ரூ.88,000 கோடி பங்கு முதலீடு


மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்திய பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை அன்னிய நிதி நிறுவனங்கள் 1,600 கோடி டாலர் (88 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இது குறித்த புள்ளி விவரத்தை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ளது. ஆசிய நாடுகள்:அதில், நடப்பு ஆண்டு, செப்., 28ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில்,1,611 கோடி டாலர் (ரூ.88,605 கோடி) அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நடப்பு செப்டம்பர் மாதம் மட்டும், அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில், 382 கோடி டாலர் (21,010 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.


இந்தவகையில், நடப்பாண்டில், ஆசிய நாடுகளிலேயே, இந்திய பங்குச் சந்தைகளில் தான், அதிக அளவில் அன்னிய முதலீடு குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திடீர் எழுச்சிக்கு, உள்நாட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்த திட்டங்களும், வெளிநாட்டு மத்திய வங்கிகளின் நடவடிக்கைகளால், சர்வதேச பணப்புழக்கம் உயர்ந்துள்ளதுமே காரணம் என, பங்குச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்."சென்செக்ஸ்' :நடப்பு ஆண்டில், ஆசிய அளவில், இந்திய பங்குச் சந்தையின், "சென்செக்ஸ்' மற்றும் தேசிய பங்குச் சந்தையின், "நிப்டி' குறியீட்டு எண்களின் வளர்ச்சி மிகச் சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.நடப்பாண்டு, பிப்ரவரி மாதம், மிக அதிக அளவாக, 500 கோடி டாலருக்கும் அதிகமாக, இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீடு குவிந்தது.

இது, மார்ச் மாதம் 150 கோடி டாலராக குறைந்தது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து, முறையே 10.30 கோடி டாலர் மற்றும் 27.30 கோடி டாலர் அளவிற்கு, முதலீடுகளை திரும்பப் பெற்றன.இந்த நிலையில், ஜூலை மாதம், மீண்டும் அன்னிய முதலீடு அதிகரித்தது. அன்னிய முதலீட்டாளர்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தனர்.நடப்பாண்டில், பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய முதலீடுகளை பொறுத்தவரையில், சீனா நீங்கலான ஆசிய நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்து, தென்கொரியா, 1,309 கோடி டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜப்பான்:இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், தலா 200 - 400 கோடி டாலர் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.வழக்கமாக, அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகளை, அதிக அளவில் ஈர்க்கும் ஜப்பான் நாட்டின் பங்குச் சந்தையில், நடப்பாண்டில், இதுவரை 369 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே அன்னிய முதலீடு குவிந்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையின் அண்மைக்கால எழுச்சி காரணமாக, பல ஆய்வு நிறுவனங்கள், "சென்செக்ஸ்' குறியீடு குறித்த இலக்கை உயர்த்தியுள்ளன.மார்கன் ஸ்டேன்லி நிறுவனம், 2013ம் ஆண்டு டிசம்பருக்குள், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 23,069 புள்ளிகளை எட்டும் என, மதிப்பீடு செய்துள்ளது. இது, இதுவரை எட்டாத நிலையாகும்.கடைசியாக, கடந்த 2008ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி,"சென்செக்ஸ்' 21,206.77 புள்ளிகளை எட்டியிருந்தது. இதுவே, அதிகபட்ச அளவாகும். வரும் ஆண்டு, இதை விட அதிகமாக உயரும் என,மார்கன் ஸ்டேன்லி மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் வர்த்தகம்:அன்னிய முதலீடு அதிகரித்து வருவதால், இந்திய பங்குச் சந்தைகளின் தினசரி வர்த்தகம் சூடு பிடித்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், செப்டம்பர் மாதத்தில், அன்றாடம் சராசரியாக 14,150 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது, சென்ற பிப்ரவரியில், மிகவும் அதிகபட்சமாக 19,887 கோடி ரூபாயாக இருந்தது.மே - ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதங்களில், தினசரி வர்த்தகம், சராசரியாக 12,000 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே நடைபெற்றது.

0 comments: