"பின்லேடன்" என்ற பெயரைக் கேட்டதுமே அவன், மிகப் பெரிய தீவிரவாதி என்பது அனைவரின் மனதிலும் தோன்றிவிடும். அவன் ஏன் தீவிரவாதியாக மாறினான்? எப்படி மாறினான்? என்பது தொடர்பாக பல மாறுபட்ட தகவல்கள் உள்ளன. அவனைப் போலவே அந்த தகவல்களும் புரியாத புதிர்களாகவே உள்ளன. பின்லேடனின் முழுப் பெயர் ஓசாமா பின்முகம்மது பின் ஆவாட் பின்லேடன்.
1957-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் பிறந்தான். பின்லேடனின் தந்தை பெயர் முகம்மது பின்லேடன். சவூதி அரேபியாவில் கட்டுமானத் தொழிலில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கோடீசுவரரான இவருக்கு 22 மனைவிகள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
22 மனைவிகள் மூலம் முகம்மது பின்லேடனுக்கு 55 குழந்தைகள் பிறந்தனர். ஆனால் சிலர் 70 குழந்தைகளுக்கு மேல் உள்ளனர் என்று சொல்கிறார்கள். இதுவரை அந்த கணக்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இஸ்லாமிய சட்டத்துக்கு பயந்து முகம்மது பின்லேடன் 4 மனைவிகளை மட்டுமே கணக்கில் காட்டி இருந்தார். மற்ற மனைவியர் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்து வந்தனர்.
அத்தகைய மனைவிகளில் ஒருவர் அமிதியா அல் அட்டாஸ். இவர் முகம்மது பின்லேடனின் 10-வது மனைவி என்று பட்டியலிடப்பட்டுள்ளது. முகம்மது பின்லேடன்- அமிதியா அல் அட்டாஸ் தம்பதியருக்கு ஒரே ஒரு மகன் பிறந்தான். அவன் தான் ஒசாமா பின்லேடன். தந்தையின் வழியில் ஒசாமாவும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டான். கோடி, கோடியாக பணம் சம்பாதித்தான்.
ஒசாமா பின்லேடனுக்கு சிறு வயதில் இருந்தே இஸ்லாமியக் கோட்பாடுகளில் அதிக பற்று ஏற்பட்டது. சில கணிப்புகளின்படி, ஒசாமா அவரது தந்தைக்கு 7-வது மகன் ஆவான். இதனால் சிறு வயதிலேயே ஒசாமா பின்லேடன் செல்வ செழிப்பில் மிதந்தான். என்றாலும் இஸ்லாமிய நெறிமுறைகளை ஒரு போதும் அவன் மீறியதே இல்லை. படிக்கும் வயதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டான்.
இஸ்லாமிய நாடுகளின் மீது வல்லரசு நாடுகள் செலுத்திய ஆதிக்கம் இவனது இளம் வயதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 1979-ம் ஆண்டு தன் 22-வது வயதில் பின்லேடன் சொகுசு வாழ்க்கையைத் துறந்து இஸ்லாமிய மக்களுக்காக போராட முன்வந்தான். முதலில் அவனது எதிர்ப்பு போராட்டங்கள் சாத்வீகமாகத் தான் இருந்தது.
ஆனால், சில போராளி குழுக்கள் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துக் கொண்ட பிறகு அவனது போராட்டக்களம் மாறி விட்டது. நாளடைவில் அவன் தீவிரவாதியாக மாறினான். 1988-ம் ஆண்டு அல் கொய்தா எனும் தீவிரவாத இயக்கத்தை ஒசாமா பின்லேடன் தோற்றுவித்தான்.
இஸ்லாமிய நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளை ஒழித்து கட்டுவதும், அதன் பிறகு, முகம்மது நபி வாழ்ந்த காலத்தைப் போல், ஒரு தலைவருக்குக் கீழ் உலகளாவிய இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும். இந்த இரண்டும் தான் அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய கொள்கைகளாக இருந்தன.
இந்நிலையில், 1989-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ரஷிய படைகள் வெளியேறின. இதையடுத்து, அந்த நாட்டை அல்-கொய்தா தீவிரவாதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தலிபான்களின் ஆட்சியை ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தினார்கள். இதன் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் சுதந்திரமாக ஆயுதப் பயிற்சிகள் பெற வாய்ப்பும் வசதியும் கிடைத்தன.
ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் முகாம்கள் உருவாக்கி அல்-கொய்தா தீவிரவாதிகள் பயிற்சி எடுத்தனர். அவர்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் ஏராளமான உதவிகளை செய்தது. தீவிரவாத இயக்கத்தை பலப்படுத்திக் கொண்ட பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒசாமா பின்லேடன் சவால் விட தொடங்கினான்.
ஜிகாத் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று முதன் முதலாக 1996-ம் ஆண்டு ஒசாமா பின்லேடன் 'பட்வா' வெளியிட்டான். அமெரிக்க மக்களையும், அமெரிக்க ராணுவ வீரர்களையும் பழிக்கு பழி வாங்க கொல்லப் போவதாக அறிவித்தான்.
பின்லேடனை சுண்டைக்காய் பயல் என்று அமெரிக்கா விமர்சித்தது. ஆனால் இது பற்றி கவலைப்படாத ஒசாமா பின்லேடன் இஸ்லாமிய நாடுகளில் தன் படைகளை பலப்படுத்தினான். 1998-ம் ஆண்டு மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தான். இஸ்லாமியர்களை கொன்றால், அமெரிக்க மக்களுக்கு எதிராக புனிதப்போர் நடத்தப்படும் என்றான்.
பின்லேடனின் 2-வது எச்சரிக்கையையும் அமெரிக்கா அலட்சியம் செய்தது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் 1998-ல் இரண்டு நகரங்களில் அமெரிக்க தூதரகங்களில் குண்டுகள் வெடித்தது. 2000-ம் ஆண்டு ஏதென் துறைமுகத்தில் நின்ற அமெரிக்க கடற்படை கப்பல் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த சம்பவங்களுக்கு பிறகே பின்லேடன் பற்றி அமெரிக்கா கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது. அல்-கொய்தா இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. சபையும் அல்-கொய்தா அமைப்புக்கு தடை விதித்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல், ஜப்பான், ஆலந்து, ரஷியா, சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் அல்-கொய்தாவுக்கு தடை விதித்தன. ஐரோப்பிய ஒன்றியமும் அல்கொய்தாவை உலகின் அதி பயங்கரமான தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்த காலக் கட்டத்தில் அல்-கொய்தா அமைப்பில் இருந்து தனித்து இயங்கும் சிறு, சிறு குழுக்கள் உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்கொலை தாக்குதல்களை நடத்தின.
அந்த சிறு குழுக்களின் மூலத்தை கண்டு பிடிக்க முடியாதபடி இருந்தது. உலகம் முழுவதும் அல்-கொய்தா தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. என்றாலும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அமெரிக்கா மீது அல்-கொய்தா நடத்திய பயங்கரமான தற்கொலை தாக்குதல்கள் சம்பவத்துக்கு பிறகு தான் பின்லேடன் பற்றி உலக மக்களுக்கு பரபரப்பு தகவல்கள் தெரியத் தொடங்கின.
2001-ம் ஆண்டு அமெரிக்க மீது மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை அல்-கொய்தா நடத்தப் போவதாக சுமார் 52 நாடுகளின் உளவுத்துறை அமெரிக்காவை எச்சரித்து உஷார்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, எதையும் கண்டுகொள்ளவில்லை.
அதிநவீன படைகளை வைத்துள்ள அமெரிக்கா, எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் தங்களை நெருங்க கூட முடியாது என்ற இறுமாப்புடன் இருந்தது. அந்த இறுமாப்பை 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி அல்-கொய்தா தீவிரவாதிகள் தவிடு பொடிஆக்கி விட்டனர். அன்றைய தினம் அமெரிக்கர்களுக்கு துக்க தினமாக விடிந்தது.
அதிகாலை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்ட 4 பெரிய விமானங்களை ஒரே சமயத்தில் 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் கடத்தினார்கள். விமானிகளை துரத்தி விட்டு, விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்த அல்கொய்தா தீவிரவாதிகள் அந்த 4 விமானத்தையும் ஓட்டினார்கள்.
அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான, "பென்டகன்" மீது முதல் விமானம் மோதியது. இதில் பென்டகனின் ஒரு பகுதி அழிந்தது. இந்த அதிரடி தாக்குதலால் அமெரிக்கா நிலை குலைந்தது. அமெரிக்காவின் முப்படைகளும் மிரண்டு போயின.
அவர்கள் சுதாரித்து பதிலடி தாக்குதல் நடத்துவதற்குள் இரண்டு விமானங்களை அல்-கொய்தா தீவிரவாதிகள் நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது மோத செய்து, தற்கொலை தாக்குதல்களை நடத்தினார்கள். இரட்டை கோபுர தாக்குதலை அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்து தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேரடி ஒளிபரப்பு செய்தது.
உலகம் முழுவதும் அந்த தற்கொலை தாக்குதலை தொலைக்காட்சிகளில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போனர்கள். 110 மாடிகளுடன் கம்பீரமாக நின்ற இரட்டை கோபுரம் சில நிமிடங்களில் இடிந்து, தகர்ந்து தரை மட்டமானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் பிணமானார்கள்.
இந்த தாக்குதலுக்கு காரணமான ஒசாமாவை பழி தீர்க்க வேண்டும் என்ற தீராக்கோபம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரியது. இதற்கு ஆப்கானிஸ்தான் மறுக்கவே அந்த நாட்டின் மீது அமெரிக்கா விமானத்தாக்குதல் நடத்தியது. இதில் தலீபான்கள் ஆட்சியை இழந்தனர். பின்லேடனும் ஓடி ஒளிந்தான். அவன் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக நம்பப்பட்டது.
இதை நன்கு அறிந்து இருந்த பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் முஷரப், சண்டையில் பின்லேடன் இறந்து இருக்கலாம் என்றும், பாகிஸ்தானில் இல்லை என்றும், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைகுன்றுகளில் அவன் பதுங்கி இருக்கலாம் என்று பொய்க்கதைகளை பரப்பினார்.
அமெரிக்காவின் உளவுத்துறையும் மற்ற நாடுகளின் உளவு நிறுவனங்களும் அவன் இருப்பிடத்தை கண்டறியும் முயற்சியில் இறங்கின. சில நாடுகள் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்ததால், அவன் எங்கிருக்கிறான்? என்பதை கண்டுபிடிப்பதில் உளவு அமைப்புகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
எனினும் அமெரிக்காவும், நேசநாடுகளும் முயற்சியை கைவிடவில்லை. இறுதியில், அவன் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பது உறுதியானது. பாகிஸ்தானில் பின்லேடன் மறைவிடத்தை கண்டுபிடிக்க அமெரிக்க உளவுத் துறை ஒரு யுக்தியை கையாண்டது.
அந்நாட்டு டாக்டர்கள் உதவியுடன் போலியான மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது. இந்த குழுவில் உள்ளவர்கள் கணக்கெடுப்பதுபோல், வீடு வீடாகச் சென்று, யார்... யார் இருக்கிறார்கள்? என்று ரகசியமாக நோட்டமிட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள அபோதாபாத் என்ற ஊரில், ஆடம்பரமான பங்களாவில் அவன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா அவசர அவசரமாக அந்த பங்களாவில் இருந்து சற்று தள்ளி, ராணுவ முகாமை ஏற்படுத்தியது.
குண்டுவீச்சு மற்றும் அதிரடி தாக்குதலில் நன்கு தேர்ச்சி பெற்ற கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்தபடியே பின்லேடன் பதுங்கி இருந்த பங்களாவை கண்காணித்தனர். மேலும், அந்த பங்களா சுற்றுச்சுவரின் உள்பகுதியில் ரகசிய கேமராக்களை ஒட்ட வைத்து, உள்ளே இருப்பவர்களின் நடமாட்டத்தையும், பின்லேடன்கூட யார்...யார் இருக்கிறார்கள்? என்றும் கண்காணித்தனர்.
அதன் அடிப்படையில், அந்த பங்களாவில் அதிரடியாக புகுந்து, தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவ அதிகாரிகள் யுக்திகளை வகுத்தனர். அந்த யுக்தியை செயல்படுத்த 'சீல்ஸ்' அதிரடிப்படை வீரர்கள் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது.
அந்த படையினர் 2.5.2011 அன்று, அதிரடியாக பின்லேடன் பங்களாவுக்குள் புகுந்து சோதனை போட்டனர். ஒரு அறையில் பதுங்கி இருந்த பின்லேடனையும், அவனது மகனையும், ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
இந்த அதிரடித் தாக்குதல் சம்பவத்தை அமெரிக்காவில் இருந்தபடி அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் நேரில் பார்த்தனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின்லேடன் கொலை சம்பவத்தை வீடியோ திரையில் பார்த்தபடி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோர் பரபரப்பான முகங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அங்கு மற்ற அறைகளில் இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்லேடன் உடலை யு.எஸ்.எஸ்- கார்ல் விஷன் என்ற அதிநவீன கப்பலில் ஏற்றிச் சென்று கடலுக்கு அடியில் ராணுவம் புதைத்து விட்டது. பூமியில் புதைத்தால், அவனது ஆதரவாளர்கள் அவனுக்கு அங்கு நினைவிடம் எழுப்பினாலும் எழுப்பி விடுவார்கள் என்றே, யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கடலுக்கு அடியில் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.