நாட்டில் புதிய வங்கிகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.
வங்கித் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த 1993-ஆம் ஆண்டில் வங்கித் துறையில் தனியாரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. கடைசியாக, 2001-ஆம் ஆண்டு கோடக் மஹிந்திரா மற்றும் யெஸ் வங்கி ஆகிய இரு வங்கிகள் உரிமம் பெற்றன.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தனியார் வங்கி தொடங்குவது குறித்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
வங்கி தொடங்க திட்டமிடும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் முக்கியமானவை:
வங்கித் துறையில் ஈடுபடத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் சிறந்த செயல்பாடு இருந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மூலதனம் ரூ. 500 கோடியாக இருக்க வேண்டும். அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாடுவாழ் இந்தியர் ஆகியோரின் சார்பில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 49% வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வங்கி தொடங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு ஜூலை முதல் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உரிமம் வழங்கப்பட்ட ஒரு ஆண்டுக்குள் வங்கி தொடங்கப்பட வேண்டும். 3 ஆண்டுகால செயல்பாட்டுக்குப் பின்னர் வங்கியை பங்குச் சந்தையில் பட்டியலிட வேண்டும். வங்கியின் 25% கிளைகள் கிராமங்களில் அமைக்க வேண்டும். விண்ணப்பித்த நிறுவனங்களின் பெயர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்படும். வங்கிக்கான உரிமம் வழங்கும் முன், அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டறியப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment