'ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது


இந்தியாவின் தேசிய கீதமாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது.

இந்த கீதம் முதன்முதலில் பாடப்பட்டது கொல்கத்தாவில் மிகச் சரியாக நூறு வருடங்கள் முன்பு தான். பிற்பாடு இது பல்வேறு சர்ச்சைகளை எல்லாம் சமாளித்து இந்தியாவின் தேசிய கீதமாக உருவெடுத்தது.


இந்தப் பாடலை இயற்றிய வங்காள மஹாகவி ரபீந்திரநாத் தாகூர்தான், இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியர் ஆவார்.

1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்து ஏழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.

அது முதல் இந்திய மக்களின் கற்பனையையும் அரசியல் அமைப்பின் கற்பனையையும் வசீகரித்த ஒரு பாடலாக இது இருந்து வருகிறது.

சகல விதமான அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் ஒரு பாடலாக 'ஜன கண மன' திகழ்கிறது.

நவீன வடிவங்கள்

அவ்வப்போது புதிய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப நவீன இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருவதும் உண்டு.

முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பேழை, முன்னணி நடிகர் ஷாருக் கானின் திரைப்படம் போன்றவற்றில் வெவ்வேறு நவீன இசை வடிவங்களில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் மறுபுறம் இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன.

சர்ச்சைகள்

'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்திருந்தன.

"பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த இந்தியப் பகுதிகள்தான் இந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வட கிழக்கு பிரதேசத்தில் பெரும் பகுதி பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் இருந்ததால் அப்பிரதேசம் இப்பாடலின் வரிகளில் இடம்பெறவில்லை" என அஸ்ஸாமைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குமார் தீபக் தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

வட கிழக்கு பிரதேசத்தையும் பாடலில் சேர்த்தால், அப்பகுதி மக்களுக்கு இருக்கக்கூடிய தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தணிய உதவும் என்று அவர் வாதிடுகிறார்.

இந்தப் பாடல் வரியில் இருந்து சிந்துவை நீக்கிவிட்டு காஷ்மீரை சேர்க்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது கூட நடந்திருக்கிறது.

தேசிய கீத அந்தஸ்துக்கு போட்டி

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவேகூட இந்தப் பாடல் தொடர்பில் சர்ச்சை இருந்தது.

இந்த கீதத்தை தேசிய கீதமாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டதற்கு பலர் இருந்த அதே நேரத்தில் இதனை தேசிய கீதமாக ஆக்கக்கூடாது என்று வாதிட்டவர்களும் அதிகம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாழ் பணியும் ஒரு பாடல் இது என்று இவர்கள் வாதிட்டார்கள்.

பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் தேசிய கீதமாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு சாராரின் பிரச்சாரம் அமைந்திருந்தது.

ஆனாலும் மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' தேசிய கீதமாகவும் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்பதாக வரலாறு அமைந்துள்ளது.

பங்குச்சந்தை செய்திகள்


பங்குச் சந்தை மூலம் பயங்கரவாதிகளுக்கு பெரும் பணம்!



இந்திய பங்குச் சந்தை மூலமாக பயங்கரவாதிகளுக்கு பெருமளவில் பணம் சென்றிருக்கும் விவரத்தை நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் 10 முறை பங்குச் சந்தை மூலம் இப்படி பணம் சென்றுள்ளதற்கான ஆதாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது.

இத்தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயண் மீனா மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பங்குச் சந்தையில் சந்தேகத்துக்கு இடமான பரிமாற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த பரிமாற்றங்கள் மூலம் பயங்கரவாதிகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. கறுப்புப் பணம் பரிமாற்றமும் இதில் நடந்துள்ளது.

இதில் இடைத் தரகர்கள், பங்குச் சந்தை சார்ந்த சில நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றன," என்றார்.

இந்திய தொழில்துறை வளர்ச்சி பெரும் சரிவு!: 8.7%லிருந்து 3.5% ஆக குறைந்தது!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி 5.1 சதவீதம் சரிந்துள்ளது.

கடந்த ஆண்டு 8.7 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி வெறும் 3.5 சதவீதமாக சுருங்கிவிட்டது.

தொழில்துறையில் 76 சதவீதத்தை உற்பத்தித் துறை தான் பூர்த்தி செய்கிறது. இந்தத் துறையில் தான் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சுரங்கத்துறை, மின் உற்பத்தித் துறை, ரப்பர், பிளாஸ்டிக் உற்பத்தி ஆகியவை கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

மருத்துவ உபகரணங்கள், வாட்சுகள், பாய்லர்கள், பழச்சாறு, தோல் பொருட்கள், மார்பிள்கள்-டைல்கள், அரிசி உற்பத்தி உள்ளிட்ட சில பிரிவுகள் தான் வளர்ச்சியை சந்தித்துள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமையன்று வணிகத்தில் 52 ரூபாய் 84 காசு என்ற அளவைத் தொட்ட இது செவ்வாய்கிழமை 53 ரூபாய் 74 காசு அளவுக்கு குறைந்தது. இது மிகப்பெரிய சரிவு என்று சந்தையியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறக்குமதியாளர்கள் கவலையும் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். திங்கட்கிழமையன்று இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு குறைந்துள்ளதாக வெளியான செய்தியால், அமெரிக்க டாலரை வாங்குவதில் வங்கி மற்றும் இறக்குமதியாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது.

11 பைசா உயர்வு

இன்னொருபுறம் பிற நாட்டு நாணயங்களுக்கும், அமெரிக்க டாலருக்கும் இடையேயான விகிதாச்சார மாற்றத்தின் தாக்கமும், யூரோவின் நிச்சயமற்றத் தன்மையும் இந்திய ரூபாயின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. வரும் 16ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டு குறித்த அரையாண்டு கொள்கையை வெளியிட உள்ள நிலையில் ரூபாயின் சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்று காலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா அதிகரித்தது. இது சாதாரண உயர்வுதான் என்கின்றனர் சந்தையியல் வல்லுநர்கள்

இறக்குமதிக்கு திண்டாட்டம்

ரூபாய் மதிப்பு சரிவினால் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றுமதியாளர்கள் கொண்டாட்டம்

டாலரின் மதிப்பு உயர்வு திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காட்டில் அடைமழையாகக் கொட்டிவருகிறது. இதுவரை சரிவில் இருந்த பின்னலாடை சந்தை இதனால் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தியா: வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு


இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இருபது வருடங்களில் இரு மடங்காகியுள்ளதாக ஒரு அறிக்கை கூறியுள்ளது.

இந்த விசயத்தில் வளரும் நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 வீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 வீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்றும் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு கூறியுள்ளது.

உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. அதாவது 121 கோடி இந்திய மக்களில் 42 வீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாவிற்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கிறார்கள்.

பிரஸில், இந்தோனேசியா மற்றும் சில குறியீடுகளின் அடிப்படையில், ஆர்ஜண்டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக, இந்த அறிக்கை கூறுகிறது.

இதற்கு மாறாக சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வருமான வேறுபாடு அதிகரித்துள்ளது.

வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா சரியாக செயற்படவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

37 வீதமான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக இந்திய அதிகாரபூர்வ அறிக்கை கூறுகின்ற போதிலும், 42 வீதமான இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பாரிஸை தளமாகக் கொண்ட இந்த அமைப்பில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வருகின்ற 34 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கிராமங்களில் உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான தனிச்செலவுகளை சமாளிப்பதற்கு ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 26 ரூபாய் வருமானமே போதுமானதாகும் என்று அண்மையில் கூறியதற்காக இந்திய அரசாங்கம் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நகரங்களைப் பொறுத்தவரை இந்தச் செலவுகளுக்கு 32 ரூபாய் போதுமானது என்றும் இந்தியா கூறியிருந்தது.

வறியவர்களை வரையறுப்பதற்கான வருமான மட்டம் மிகவும் குறைவாக அங்கு இருப்பதாகவும், வறிய மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பதற்காக வேண்டுமென்றே இந்த மட்டம் குறைத்துக் காண்பிக்கப்படுவதாக பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று மே மாதத்தில் கூறியிருந்தது.

ஊழல், மோசமான நிர்வாகம் மற்றும் குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் உதவித் திட்டங்கள்கூட சரியான பலனைத் தரவில்லை.