தொலைபேசி பயன்படுத்தும் 96.55 கோடி சந்தாதாரர்கள்


சென்ற ஜூன் மாத முடிவில், மொபைல் சேவை நிறுவனங்கள் 47 லட்சத்து 30 ஆயிரம் புதிய மொபைல் சந்தாதாரர்களை இணைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 96 கோடியே 55 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93 கோடியே 40 லட்சத்து 9 ஆயிரம் ஆகும். தரைவழி இணைப்பு பெற்ற தொலைபேசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 14 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். இந்தியாவில் 100க்கு 77 பேர் தொலைபேசி பயன்படுத்துபவர்களாக உயர்ந்துள்ளனர். இந்த தகவல்களை ட்ராய் அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.

ஜூனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களைப் புதிய சந்தாதாரர்களாக இணைத்துக் கொண்டுள்ளது. ஜூன் முடிவில், இந்நிறுவனத்தின் மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை 18 கோடியே 73 லட்சமாகும். இரண்டாவது இடத்தில் வோடபோன் நிறுவனம் 12 லட்சத்து 20 ஆயிரம் பேரை புதிதாய் இணைத்துள்ளது. இந்நிறுவனத்தில் ஜூன் மாத இறுதியில் உள்ள சந்தாதாரர் எண்ணிக்கை 15 கோடியே 37 லட்சம்.

இந்த நிறுவனங்களை அடுத்து டாட்டா டெலி சர்வீசஸ் மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் உள்ளன. உரிமத்தை இழந்த பின்னரும், யூனிநார் நிறுவனம் 5 லட்சம் பேரை புதிய சந்தாதாரர்களாகப் பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் 41 லட்சத்து 60 ஆயிரம் பேர், எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்ற விண்ணப்பித்தனர்.

0 comments: