பட்டினத்தார்.

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது... குச்சி குச்சியாய்ப் பூமியில் இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டை இல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீது தலை வைத்துப் படுத்திருந்தார். ஒருத்தி, ""யாரோ மகான்'' என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கி நடந்தாள். மற்றொருத்தியோ, ""ஆமாம்... ஆமாம்... இவரு பெரிய சாமியாருக்கும்... தலையணை வைச்சுத் தூங்கற சுகம் மாதிரி வரப்பு மேல தலை வைச்சுத் தூங்கறான் பாரு... ஆசை பிடிச்சவன்'' என்று கடுஞ்சொல் வீசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்த பட்டினத்தார், ""ஆஹா... நமக்கு இந்த அறிவு இது நாள்வரை இல்லையே'' என்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழே வைத்துப் படுத்தார்.
சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து இறங்கிக் கீழே தலை வைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, ""பார்த்தியாடி... நீ சொன்னதைக் கேட்டு உடனே கீழே இறங்கிப் படுத்துட்டாரு... இப்பவாவது ஒத்துக்கோ... இவரு மகான்தானே..!'' என்றாள்.
அவளோ, ""அடி போடி... இவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்ன பேசுறாங்கன்னு ஒட்டுக் கேக்குறான்... அதைப் பத்திக் கவலைப்படறான் இவனெல்லாம் ஒரு சாமியாரா?'' என்று ஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை.

0 comments: